அரசாங்கம் மக்களையும் படையினரையும் அடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் படையினரையும் பொது மக்களையும் அடக்க முயற்சித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சந்திரகுப்த தெனுவர நேற்று சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் படையினரை இல்லாமல் ஆக்க போவதாக கூறுகிறார். அவர் அப்படி கூறும் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் அந்த கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

30 ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உயிர்களை தியாகம் செய்த படையினரை இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

அன்று படையினரை சிறையில் அடைத்தனர். படையினரை தொடர்ந்தும் விமர்சிப்பதே அரசாங்கத்தில் கொள்கையாக இருந்தது. நாங்கள் எப்படியும் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச அனுராதபுரம் கூட்டத்தில் நேற்று பகிரங்கமாக கூறினார்.

காலிமுகத்திடலில் இன்று கூடும் கூட்டத்தை பார்த்து வாக்களிக்காது, நாளைய தினம் எல்பிட்டிய தேர்தல் முடிவை பார்த்து வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளதாக சந்திரகுப்த தெனுவர நேற்று பகிரங்கமாக கூறினார்.

அரசியல் பழிவாங்கலுக்காக இவர்கள் தொடர்ந்தும் நீதிமன்றத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக நீதிமன்றத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டனர். அதனை அவர்களால் இன்னும் நிறுத்த முடியவில்லை.

படையினர் கௌரவமாக வாழக் கூடிய சமூகத்தை ஏற்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி சுதந்திரமான தேசத்தை உருவாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு நாம் மக்களை கேட்டுக்கொள்கிறோம் எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.