மகிந்த காலத்தில் கடன் சுமையில் பெரிய மாற்றம் நடந்தது: சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

கடன் சுமை என்பது பழைய காலத்தில் இருந்து இருந்த ஒன்று எனவும் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்திலும் இலங்கை கடன் பெற்றிருந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துக்கொண்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க,

கடன் சுமை குறித்து இன்று பலரும் பேசுகின்றனர். டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்கவின் காலத்திலும் இலங்கை கடன் பெற்றிருந்தது.

இவ்வாறு பல்வேறு விதமாக கடன் சுமை பற்றி பேசுகின்றனர். எனினும் நாட்டின் கடன் சுமையில் மகிந்த ராஜபக்ச காலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

நீண்டகால மானிய கடன்களுக்கு பதிலாக குறுகிய கால மானிய அடிப்படையில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, வருமானம் கிடைக்காத இடங்களில் முதலீடு செய்யப்பட்டது.

விஞ்ஞான அடிப்படையின்றி தாம் விரும்பிய அபிவிருத்திகளில் அதிகளவில் கடனாக பெற்ற பணத்தை முதலீடு செய்தனர். 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஹம்பாந்தோட்டையில் செலவிடப்பட்ட தனிநபர் மூலதனம் 15 லட்சம் ரூபாய்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு அந்த 10 ஆண்டுகளில் ஒருவருக்கு 45 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் பணத்தை அபிவிருத்திக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவிட்டுள்ளது.

கப்பல்கள் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையங்கள், மாநாடுகள் நடத்தப்படாத மாநாட்டு மண்டபங்கள், கிரிக்கெட் போட்டிகள் நடக்காத கிரிக்கெட் மைதானம் என வருமானம் ஈட்ட முடியாத முதலீடுகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்துள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.