ஜனாதிபதியினால் சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது: தம்மர அமில தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை ஜனாதிபதியினால் சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது என சிவில் செயற்பாட்டாளரான தம்மர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி பதவி என்பது நீதிமன்றங்களுக்கு உத்தரவிடக் கூடியதல்ல என்பதனை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் கோதபாயவை ஜனாதிபதியாக்கி அவரின் ஊடாக நடுப் பகலில் நான்கு கொலைகளை செய்த நபர் ஒருவரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து கொள்ள முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் ஜனாதிபதியினால் நீதிமன்றின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்பதனை கோத்தபாய ராஜபக்ச நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டின் சுயாதீனமான நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது எனவும், நீதிமன்றம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது சர்வாதிகார ஆட்சி கிடையாது, அண்ணாவைப் போன்று கோத்தபாயவிற்கு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் அவரும் ஓர் சந்தேக நபரேயாகும் என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டத்தின் போது, அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படைவீரர்களை ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் விடுதலை செய்வதாக கோத்தபாய ராஜபக்ச உறுதிமொழி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.