நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்: சஜித் முன் பொன்சேகா சபதம்

Report Print Rakesh in அரசியல்

"நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்குத் தந்த பொறுப்பை நான் மதிக்கின்றேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன். உங்களின், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நான் செயற்படுவேன்.

இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு வைத்துவிட்டு செல்லமாட்டேன் என்று கூறினேன். அப்படியே நான் செய்தேன்.

அதுபோலவே நான் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். சட்டத்தைக் கையில் எடுக்காமல் நாங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்."

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது.

இதில் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போது, "நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் - உறுதிப்படுத்தும் பொறுப்பு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார். அதன்பின்னர் சரத் பொன்சேகா உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"படைத்தரப்பினருக்குப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் தீர்க்க வேண்டும். ஓய்வுபெற்ற படையினர் பொலிஸாரின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். படையினர் குறித்து இன்று அக்கறையாகப் பேசும் ராஜபக்சவினர் அன்று படையினருக்கு என்ன செய்தனர்? அவர்களால் படையினர் பாதிக்கப்பட்டனர். இங்கே பக்கத்தில் இருக்கும் இராணுவத் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.

அந்தக் காணி சீனர்களுக்கு வழங்கப்பட்டது. அன்று தனிப்பட்ட காரணத்தினால் அமெரிக்கா சென்ற கோட்டாபய இன்று இராணுவ நலன் பற்றி பேசுகின்றார்.

சுனாமி நிவாரண நிதியைத் திருடிய ராஜபக்ச கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகின்றது. மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம்" - என்றார்.