இராணுவ ஆட்சிக்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! சஜித் வாக்குறுதி

Report Print Rakesh in அரசியல்

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பாதுகாப்பா அல்லது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பா என்பதை யோசியுங்கள். குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சி அவசியம் இல்லை. இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன். எனவே, இந்தத் தேர்தலில் பொதுமக்களின் சக்தியே வென்றெடுக்கப்பட வேண்டும்."

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலகத்துடன் போட்டியிட்டு முதல் தர நாடாக இலங்கையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். நவீன யுகத்துக்கேற்றபடி எங்கள் நாட்டை மாற்றி நிம்மதி பெருமூச்சு விடும் நாடாக மாற்றி அனைத்து துறைகளிலும் மேம்படுத்த வேண்டும்.

நான் தவறு செய்தால், அவற்றைச் சரிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அத்தோடு பொதுமக்கள் முன்வந்து அவர்களிடமிருந்து மன்னிப்புக் கோரவும் நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்.

தனது சொந்தக் குடும்பத்துக்கும் தங்கள் உறவினர்களுக்கும் முதலிடம் கொடுக்கும் ஒரு தலைவர் இந்த நாட்டுக்குத் தேவையில்லை.

இந்த நாட்டின் எதிர்காலத்தை ஒரு மாளிகையின் உள்ளே இருக்கும் ஒரு குடும்பம் தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டின் எதிர்காலத்தை இந்த நாட்டின் கடின உழைப்பாளிகளே தீர்மானிக்க வேண்டும்.

நாம் அமைக்கும் புதிய ஆட்சியில் திருட்டு, ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கமாட்டோம்.

இந்த நாடு இதுவரை கண்டிராத தூய்மையான அரசாக நமது அரசு மாறும். இதற்கு எதிராக வேலை செய்ய விரும்பும் ஒருவர் இருந்தால், அவர்கள் மூட்டை கட்டிக்கொண்டு இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

எமது அரசின் கீழ் நாங்கள் சில தியாகங்களை - அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

நாங்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்லர். நாங்கள் நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள். இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை நாங்கள் சிறந்ததாக மாற்றியமைப்போம்.

பெண்களின் எதிர்காலத்தை நல்லபடியாக மாற்றி அவர்களைப் பாதுகாக்க நாங்கள் கொள்கை வகுப்போம். விவசாயக் கொள்கை, தொழிலாளர் கொள்கை வகுப்போம்.

சமுர்த்தி நிவாரணம் விசேட முறையில் வழங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்து ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவோம். அச்சமற்ற சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம்" - என்றார்.