சஜித் பிரேமதாஸவுக்கு அநீதி! தேர்தல்கள் ஆணைக்குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில ஊடகங்களின் செயற்பாடுகள் பக்கச்சார்பாக இருப்பதாக தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், சில அரச மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றன.

“ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்ற நிரூபங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களிலும் இந்தக் குறைப்பாடுகள் உள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு கோரப்பட்டு முடிந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சம அளவிலான ஒளிபரப்பு சந்தர்ப்பம் வழங்கப்படாமை, செய்திகள், நேர்காணல்கள், விவாதங்களில் சமமான நேரங்கள் வழங்கப்படாமை மற்றும் நபர்களின் தெரிவுகள் குறித்து நியாயமற்ற செயற்பாடுகள் ஊடகங்கள் பின்பற்றுகின்றன.

எனவே இது குறித்து கவனம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். ஆரம்பத்திலேயே இவ்வாறான குழறுபடிகள் ஏற்படுவதால் அநீதி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அநீதி ஏற்படும் விதமாகவும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 14 நாட்களில் ஊடகங்கள், வானொலிகள் வெளியிட்ட செய்திகள், வாதங்கள் குறித்து விசாரணை நடத்தும்படி இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம்.

இதற்கமைய எடுக்கப்படுகின்ற நடவடிக்கையின் பிரகாரம் நாங்கள் சட்டநடவடிக்கை கூட எதிர்காலத்தில் எடுப்பதற்கு ஆலோசித்து வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.