மகிந்த - மைத்திரி செய்து கொண்ட உடன்படிக்கை! எச்சரிக்கை மணி அடித்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கு ஆதரவு கொடுப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவானது அக்கட்சியை நிர்மூலமாக்கும் என அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் தகவல் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும். சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அதனைக் கைவிட்டாலும், நான் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளமாட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவு சரியானது அல்ல. இது சுதந்திரக் கட்சியின் இருப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.

பொதுஜன பெரமுனவுடன் விருப்பத்துடன் இணைந்து கொள்ள ஜனாதிபதி முடிவெடுக்கவில்லை. இது சுதந்திரக் கட்சியை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு. தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியில் இணைவார்கள். அதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சி இருக்காது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, பொதுஜன பெரமுனவுடனோ இணைந்து கொள்ளமாட்டேன். சுதந்திரமாக இருக்கவே எதிர்பார்க்கிறேன். தனியாக இந்த நிலைப்பாட்டை எடுக்கும் போது தனியாகவே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப் பாம்பு அல்ல என்றார்.