மன்னார் மாநகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணை தூதுவர் அன்றியாஸ் பேர்க் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் மன்னார் நகர முதல்வரின் அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மன்னாரின் தற்போதைய அரசியல் நிலை, அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு பல சவால்கள் உள்ளதாகவும், வழங்கப்படும் அபிவிருத்தி வேலைகள் பங்கீட்டில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் நகர முதல்வர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் நகரை அழகுபடுத்த மேலும் தமக்கு வாகனங்களும், பணியாளர்களும் தேவைப்படுவதாகவும் நகர அபிவிருத்திக்கு அதிக பணம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் நகர முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கவுள்ளது என தூதுவர் வினவியுள்ளார்.
இதற்கு நகர முதல்வர் பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பாக தலைமைப்பீடம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழருக்கு எந்த பயனுமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து நகர முதல்வரால் முன்வைக்கப்பட்ட சகல கருத்துக்களையும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தம்மால் முடிந்தளவிற்கு உதவி புரிவதாகவும் உறுதியளித்துள்ளார்.