சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் நோக்கில் புதிய கூட்டணி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான குமார வெல்கம இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுமார் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பில் நேற்றைய தினம் கூடி, கோத்தபாயவிற்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

கோதபாயவிற்கு ஆதரவளிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்கள் இணங்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் கூட்டணியின் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தொகுதி அமைப்பாளர்கள் 183 பேரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடிய போது இரண்டு பேர் மட்டுமே கோத்தபாயவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டம் தொடர்பில் கட்சியின் செயலாளர் அறிக்கையை வெளியிட்டால் இந்த உண்மை அம்பலமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் கூட்டணியின் மா சம்மேளனம் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.