எல்பிடிய தேர்தல் தொடர்பான விசேட பார்வை

Report Print Jeslin Jeslin in அரசியல்

காலி மாவட்டத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

28 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஐந்து கட்சிகளின் சார்பில் 155 பேர் களமிறங்கியுள்ள நிலையில் இவர்களிலிருந்து தொகுதி அடிப்படையில் 17 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 11 பேருமாக மொத்தம் 28 பேர் சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 750 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

வாக்களிப்பு முடிவடைந்த கையோடு வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகி, இரவு 10 மணிக்குள் இறுதி முடிவை அறிவிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

போட்டியிடும் அரசியல் கட்சிகள்

1.ஐக்கிய தேசியக்கட்சி

2.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

3.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

4.ஜே.வி.பி.

5.ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் நகர, பிரதேச, மாநாகர சபைகளுக்கான தேர்தல்கூட கட்டங் கட்டமாகவே நடத்தப்பட்டன.

2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் அனைத்து உள்ளாட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் முடிவை அரசாங்கம் எடுத்தது.

அத்துடன், தேர்தல் முறைமையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி விகிதாசார முறையில் அல்லாமல், தொகுதி, விகிதாசாரம் என கலப்பு முறைமையிலேயே 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கலின்போது, எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு தேர்தல் அதிகாரிகளால், நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அக்கட்சி உறுப்பினர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுக்கலை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல்செய்த மனுமீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு ஜனவரி 30 ஆம் திகதி தடை விதித்தது.

இதனால், பெப்ரவரி 10 ஆம் திகதி 340 சபைகளுக்கே தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி, வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஏற்று தேர்தலை உடன் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி ஒக்டோபர் 11 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.செப்டம்பர் 27 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது.

எல்பிடிய பிரதேச சபை யார் வசமாகும்?

இலங்கையில் 1991 ஆம் ஆண்டே உள்ளாட்சிசபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும், 2002 இல் நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பான தரவுகளே தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இருக்கின்றது.

அந்தவகையில் 2002 இல் நடைபெற்ற உள்ளாட்சி சபைத் தேர்தலில் 48.27 வீத வாக்குகளுடன் 8 ஆசனங்களை கைப்பற்றி ஐக்கிய தேசியக்கட்சியே எல்பிடிய பிரதேச சபையைக் கைப்பற்றியது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி 5 ஆசனங்களையே கைப்பற்றியது.ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களே இருந்தனர். புதிய தேர்தல் முறைமையாலேயே உறுப்பினர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2006 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியால் 5 ஆசனங்களையே பெறமுடிந்தது. ஆட்சியும் கைமாறியது.

2011 இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 58.54 சதவீத வாக்குகளுடன் 10 ஆசனங்களைக் கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. ஐ.தே.கவின் பிரதிநிதித்துவம் 4 ஆக குறைந்தது.

காலி மாவட்டமானது தற்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணியின் அரசியல் கோட்டையாகவே பார்க்கப்படுகின்றது.

2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் காலி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு 3 இலட்சத்து 77 ஆயிரத்து 126 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு 2 இலட்சத்து 93 ஆயிரத்து 994 வாக்குகளே அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் 3 இலட்சத்து 12 ஆயிரத்து வாக்குகளுடன் 6 ஆசனங்களை மஹிந்த தரப்பு கைப்பற்றியது. 2 இலட்சத்து 65 ஆயிரத்து வாக்குகளுடன் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்களே கிடைத்தன.

நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இத்தேர்தல் நடைபெறுவது முக்கியத்துவம்மிக்கதாக பார்க்கப்படுகின்றது.

இத்தேர்தலில் கிடைக்கும் முடிவுகளை வைத்து பிரசாரம் முன்னெடுக்கபதற்கும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

2018 இல் தனித்து தேர்தலை எதிர்கொண்ட சுதந்திரக்கட்சி தற்போது மஹிந்த தரப்புடன் இணைந்துள்ளது. எனவே, இரு தரப்புகளும் இணைந்து எல்பிடிய சபையை கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் வாக்குவங்கியில் முன்னேற்றம் ஏற்பட்டால் அதனை வைத்து ஐக்கிய தேசியக்கட்சியும் பிரசாரம் முன்னெடுக்கும்.

ஆர்.சனத்