சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு காரணம் இதுதான்!

Report Print Rusath in அரசியல்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார் எனத் தெரிவித்து, அதனைச் சிங்கள ஊடகங்கள் வெளிப்படுத்தியதன் காரணமாகத் தான் அவர் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோலிவியுற்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வெல்லாவெளியில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் போராளியாக இருந்து முதலாவது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாலதியின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமாறு தெரிவித்திருந்தது.

அதுபோல் தற்போது கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கூறலாம் தானே என சிலர் கேட்கின்றார்கள்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இருவருமே இனப் படுகொலையைச் சந்தித்தவர்கள். ஒருவர் கட்டளையிட்டவர், மற்றவர் களத்தில் நின்றவர். இதில் கூடியவர் யார் குறைந்தவர் யார் என்பதைப் பார்க்க வேண்டியதாக இருந்தது.

அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு முன்பே மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அப்போது அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற்ற பின்னர்தான் நாங்கள் சரத் பென்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பென்சேகா ஏன் தோல்வியடைந்தார் என்று தெரியுமா? அப்போது சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுகொண்டு ஆதரிக்கவில்லை.

அப்போதிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவரிடம், வடக்கு மற்றும் கிழக்கை இணைக்க வேண்டும், அரசியல் தீர்வுவைப் பெற்றுத்தர வேண்டும், கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களை சமர்ப்பித்து அவரிடம் கையளித்ததுடன் அதில் அவர் கையொப்பம் இட்டதன் பின்னர் தான் நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம்.

அதனை நாங்கள் வெளியில் சொல்ல வேண்டாம் என்ற ரீதியில் நாம் அதனை நாம் சொல்லவில்லை.

ஆனால் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பில் ஒன்றில் மக்களிடம் சொல்லவேண்டிய தேவை இருந்ததன் காரணமாக சரத் பொன்சேகாவிடம் நாங்கள் செய்து கெண்ட எழுத்துமூலமான உடன்படிக்கை பெற்றிருக்கின்றோம் என்பதைக் கூறிவிட்டார்.

பின்னர் சிங்கள ஊடகங்கள் சரத் பொன்சேகா நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார் எனத் தெரிவித்து, அதனை வெளிப்படுத்தியதன் காரணமாகத் தான் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றார் என அவர் கூறியுள்ளார்.

You My Like This Video