ராஜபக்சக்கள் சிறுபான்மை இன மக்களின் நலன்களை பற்றி கதைப்பதை ஒப்பிடும் எம்.பி

Report Print Malar in அரசியல்

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் இன்று சிறுபான்மை இன மக்களின் நலன்களை பற்றி கதைப்பதானது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இன்று காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர்,

வாக்குவேட்டைக்காக பேரினவாதத்தையும், சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் கூட்டு எதிரணியின் பக்கம், அரசியல் கைக்கூலிகளாக சில தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் செயற்படுவது வெட்கி தலைகுனிய வேண்டிய விடயமாகும்.

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக வழமைபோல் நல்லவர்கள் வேடம் பூண்டு ராஜபக்சக்களும், அவரின் சகாக்களும், பல்வேறு உறுதிமொழிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

அவர்களின் சொல் ஜாலங்களைக்கண்டு ஏமாந்து வாக்குகளை வாரி வழங்குவதற்கு தமிழ் பேசும் மக்கள், கொண்டைகட்டிய சீனர்கள் அல்லர் என்பதை ராஜபக்ச படையணி புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் பிறப்பால் மட்டுமே தமிழர்களாக இருந்துக் கொண்டு மக்களை காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் சில அரசியல் கைக்கூலிகள், தமிழர்களின் வாக்குகளை கூறுபோடுவதற்கு புது விதத்தில் வியூகம் வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

தாங்கள் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு மறைமுகமாக கூட்டு எதிரணியை வலுப்படுத்துவதே அவர்களின் உள்நோக்கமாகும்.

மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் வாக்குளை சிதறடிப்பதற்காக சிலர் வேண்டுமென்றெ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எனவே, வழமையை விடவும் மக்கள் இம்முறை விழிப்பாகவே இருக்க வேண்டும். நமது கண்முன்னே பல கருப்பு ஆடுகள் உலாவித் திரிகின்றன என அவர் கூறியுள்ளார்.