சிறுபான்மை இனம் என விளிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! சஜித் அதிரடி

Report Print Rakesh in அரசியல்

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை ஏற்படுத்துவதே எனது இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறுபான்மை இனம் என விளிப்பதைக் கூடத் தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கொழும்பு இல்லத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை இன்று சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றால் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரே வகையில் செயற்படும் திட்டங்களையே கொண்டுவரவுள்ளேன். எல்லோருக்கும் ஒரே நீதி என்பதே எனது கொள்கை.

இனவாத ரீதியான செயற்பாடுகளுக்கு நான் இடமளிக்கமாட்டேன். எனது தந்தையார் காலத்தில் கூட நாங்கள் அனைத்து இனத்தவரையும் அரவணைத்தே செயற்பட்டோம்.

பெரும்பான்மை சிங்கள மக்களின் எண்ணப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்களுக்கு உண்மை நிலையைச் சொல்ல வேண்டும். அதனை நான் செய்வேன். தமிழ் ஊடகங்கள் எனது பயணத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.