சிவாஜிலிங்கமும், ஹிஸ்புல்லாவும் வாக்குகளை சிதறடிப்பார்கள்! கோத்தபாயவின் வெற்றி உறுதி

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிவாஜிலிங்கமும், ஹிஸ்புல்லாவும் சிதறடிக்கச் செய்யப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆருடம் வெளியிட்டுள்ளது.

அதனால் தமிழர் பகுதிகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த முறை வாக்குகள் முடிவைப் பார்க்கும்போது அன்னப்பட்சிக்கான வாக்குகள் இம்முறை குறைந்துள்ளன. 2015ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்குகள் அன்னப்பட்சிக்குக் கிடைத்தன.

ஹிஸ்புல்லா ஒரு இனவாதி. அவரை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஜனாதிபதியால் துரத்திவிடப்பட்டவர். ரணிலுக்கு முடியாதுபோனது ரிஷாட்டை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு.

காத்தான்குடி பகுதியில் இனவாதிகளின் பல வாக்குகளும் ஹிஸ்புல்லாவுக்கே கிடைக்கும். இந்த நிலையில் கடந்த முறை அப்பகுதி வாக்குகள் அன்னப்பட்சிக்கே கிடைத்தன. ஆகவே இம்முறை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குச்சரிவே ஏற்பட்டுள்ளது.

மக்கள் அளிக்கும் 62 இலட்ச வாக்குகளில் கணிசமானவை ஜே.வி.பிக்கு செல்லும், இம்முறை சிவாஜிலிங்கமும் போட்டியிடுவதால் அவருக்கு எத்தனை வாக்குகள் பிரிந்துசெல்லும் என அனுமாணிக்க முடியாது.

கடந்த முறை மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விடவும் கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகள் குறைந்துள்ளன. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 40 வீதத்தில் அதிகரித்துள்ளது.

விஜயகலா கூறுவதுபோல தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சஜித்திற்கே கிடைக்கும் என்பதை ஏற்கமுடியாது. அதேபோல தோட்டத் தொழிலாளர்களது வாக்குகளும் கோத்தபாயவுக்கே திரும்பியுள்ளன.

கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அன்னப்பட்சிக்குக் கிடைத்த வாக்குகளை இம்முறை ஹிஸ்புல்லா, சிவாஜிலிங்கம் ஆகியோர் சிதறடிக்கச் செய்வார்கள்.

அதேபோல இன்னும் பல முஸ்லிம் வேட்பாளர்களும் உள்ளனர். அவர்களும் வாக்குகள் செல்லும்.

அதேபோல நுவரெலியாவில் ஆறுமுகன் தொண்டமானும் சுதந்திரக் கட்சியின் இணைவிற்குப் பின்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கே ஆதரவளிப்பார் என்று அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் கோத்தபாய ராஜபக்சவுக்கு இன்று வாக்குகள் குவிக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.