சஜித் வெற்றிபெற்றால் மட்டுமே மைத்திரியின் கட்சி காப்பாற்றப்படும்!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் மட்டுடே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாக்கப்படும் என நாடாளுமன் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் மட்டுமே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாக்கப்படும். ஏனெனில் அவர் பழிவாங்கும் குணமற்றவர்.

இதனால் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தலைநிமிர்ந்து செயற்பட முடியும். ஆனால் கோத்தபாய ராஜபக்ச அவ்வாறில்லை. அவர் வெற்றிபெற்றால் சுதந்திர கட்சி என்ற ஒன்றை மக்கள் மறந்துவிட வேண்டும்.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்பிட்டி தொகுதியில் நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எல்பிட்டிய தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும்.

எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

இந்நிலையில், சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.