தமிழர்கள் ஏன் கோத்தபாயவுக்கு வாக்களிக்க முடியாது? முன்னாள் வடக்கு ஆளுநர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

யுத்தத்தை வழிநடத்தி வெற்றி பெற்றது தானே எனக் கூறிவருகின்ற சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடியுமென்றால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஏன் வாக்களிக்க முடியாது? என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியின் சிவலிங்கப் புளியடிச் சந்தியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

யுத்தத்தை வழிநடத்தி வெற்றி பெற்றது தானே எனக் கூறிவருகின்ற சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடியுமென்றால் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஏன் வாக்களிக்க முடியாது?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் வட. மாகாணத்தில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதிலும் சரித்திரத்தில் முதற்தடவையாக தமிழ் கட்சிகளும், முன்னர் ஆயுத இயங்கங்களாக இருந்த இப்போதைய கட்சிகள் பலவும் தமது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளன.

ஆனால் தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஏனெனில் நம்பி வாக்களித்த கூட்டமைப்பு இன்றைக்கு தமக்காக எதனையும் செய்யவில்லை என்றும் அவர்கள் தமது பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவுமே அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் தேர்தல் தொடர்பாக இன்னமும் தமது முடிவை கூட்டமைப்பு அறிவிக்கவில்லை. அவர்கள் தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள், தாம் நம்பி ஏமாந்துவிட்டோம் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர். ஆகவே கூட்டமைப்பும் சரி தமிழ் மக்களும் சரி சிந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பயப்படத் தேவையில்லை. உண்மையில் பயப்படுவதானால் சரத் பொன்சேகாவைப் பார்த்தே பயப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பல வழிகளிலும் முன்னெடுத்து இன ரீதியான பிரச்சினைகளைத் தோற்றுவித்ததும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கும் காரணமாக இருந்ததும் ஐக்கிய தேசியக் கட்சியே என்றார்.