70 வயதான முதியவரை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் சதித்திட்டம்: தர்ஷன தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டங்களில் இருந்து நாட்டையும் தேசப்பற்றாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என தேசிய கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்று செயலாளர் தர்ஷன தந்திரிகே வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியதும், மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும், அமெரிக்காவின் சதித்திட்டம் என வீரவங்ச உள்ளிட்டோர் இதுவரை கூறி வந்தனர். ஆம் அது உண்மைதான், இந்த சதித்திட்டத்தின் சிறு பகுதியையே வீரவங்ச உள்ளிட்டோர் அறிந்திருந்தனர். முழு சதித்திட்டத்தை அறிந்திருக்கவில்லை. இதனால் தற்போதாவது அதனை வெளியிட வேண்டியது எமது கடமை.

2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால், அமெரிக்காவுக்கு தேவையான விதத்தில் வேலைகளை செய்யாமல் இருந்திருக்கலாம். இதனால், அவர் தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேனவை கொண்டு அமெரிக்காவின் வேலைகளை செய்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இதனை செய்யவில்லை. நீண்ட மற்றும் மத்திய கால திட்டங்களுக்கு இதன் மூலம் அடிப்படையை ஏற்படுத்திக்கொண்டனர்.

இதன் இரண்டாம் கட்டமாக தமக்கு தேவையான தலைவரை 2020 இல் ஆட்சிக்கு கொண்டு வருவதே அமெரிக்காவின் திட்டம். சிறிசேனவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்து அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை. கொண்டு வரப்பட்ட உடன்படிக்கைகளில் கையெழுத்திடாது அவர் நிராகரித்து விட்டார்.

அமெரிக்காவின் இந்த சதித்திட்டம் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் திட்டத்திற்கு அமையவே மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார். அமெரிக்காவை சமநிலைப்படுத்தவே மகிந்த ராஜபக்ச அதனை செய்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை வென்ற பின்னர் இராணுவ தளபதி சரத் பொன்சோவுக்கு அமெரிக்கா தொந்தரவு கொடுத்தது. அமெரிக்காவுக்கு செல்ல வீசா வழங்கவில்லை. மேலும் சில இராணுவ அதிகாரிகள் மீது போர் குற்றம் சுமத்தியது. தற்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும் தொந்தரவு கொடுத்தது. அமெரிக்க ராஜபக்சவுக்கும் தொந்தரவு கொடுத்தது. ஆனால், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா எந்த தொந்தரவையும் கொடுக்கவில்லை.

ஏன்?. அவர் அமெரிக்க பிரஜை என்பதால் தொந்தரவு கொடுக்கவில்லை. அமெரிக்கா தனது பிரஜைகள் மற்றும் பிரதிநிதிகள் உலகில் எங்கிருந்தாலும் இப்படித்தான் பாதுகாக்கும். இதற்காகவே கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவைக்கும் தெரியாமல் எக்ஸா உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார்.

2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த அமெரிக்கா என்ன செய்தது, அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவை அமெரிக்காவுக்கு வரவழைத்தது. தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருந்த மகிந்த ராஜபக்சவை, இலங்கையில் உள்ள சீ.ஐ.ஏ.பிரதிநிதி ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தது.

தேசப்பற்றாளர்களை இதற்கு பயன்படுத்தினர். மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது என்பதால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேறு தலைவர் உருவாகுவதை தடுக்கவே அமெரிக்கா இதனை செய்தது.

உண்மையை கூற வேண்டுமாயின் விமல் வீரவங்ச உட்பட தேசப்பற்றாளர்கள் எனக் கூறுவோருக்கு அனகாரிக்க தர்மபால கூறியது போல், அமெரிக்கா சிரிப்பு மருந்து கொடுத்தது.

இந்த தேசப்பற்றாளர்கள் நாட்டை மீட்க வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்ச வந்தே ஆக வேண்டும் என்கின்றனர். இப்படியான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் போது, இலங்கையில் உள்ள சில தனியார் ஊடக நிறுவனங்களுக்கு அந்த நிலைப்பாட்டை தூக்கி பிடிக்க பணம் வழங்கப்பட்டது.

அத்துடன் அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ச ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கியதும் அமெரிக்காவே. 1956 ஆம் ஆண்டு சிங்கள பௌத்த விழுமியங்களுடன் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக பிளவுப்படுத்தியது.

நீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றில் அமெரிக்க முகவர்கள் நுழைந்து விட்டதாக வீரவங்ச கூறினார். 52 நாள் சதித்திட்டத்தை அமெரிக்காவே அரங்கேற்றியது என்று நாங்கள் கூறுகிறோம். அப்படி செய்து மைத்திரிபால சிறிசேன மீண்டும் தலைதூக்க முடியாத நிலைமைக்கு தள்ளியது. மகிந்த ராஜபக்சவை தூக்கி நிலத்தில் அடித்தது.

நீதித்துறை அமெரிக்காவுக்கு தேவையான வகையில் நடந்துக்கொண்டதாக வீரவங்ச அப்போது கூறினார். அப்படியும் நடந்திருக்கலாம்.

அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவின் மல்வானை வீடு சம்பந்தமான வழக்கில் அவர் வழமைக்கு மாறாக விடுதலையானார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான அமெரிக்க குடியுரிமை தொடர்பான வழக்கு சம்பந்தமான விடயத்திலும் அவருக்கு எதிரான சில வழக்குகளில் இருந்தும் நீதிபதிகள் விலகிக்கொண்டமை என்பன வீரவங்ச கூறுவதை போல் நீதித்துறையில் அமெரிக்க முகவர்கள் இருக்கின்றனர் என்ற கதை உண்மை என்பதை நம்பலாம்.

தமது பொம்மை ஆட்சியாளரை இலங்கையில் ஆட்சியாளராக கொண்டு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் தேவை.

அமெரிக்கா ஏன் தனது பொம்மை ஆட்சியாளரை இலங்கையின் ஆட்சியாளராக கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதை வீரவங்ச மற்றும் தேசப்பற்றாளர்கள் நன்றாக விளக்கியிருந்தனர். இதனால், அமெரிக்கா தந்திரமாக காய்நகர்த்தியது. வீரவங்ச உள்ளிட்டோரை இயக்கும் கருவியை அமெரிக்க பிரஜைகளின் கையில் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டது. அதுவும் நடந்து விட்டது.

கடந்த காலங்களில் சிங்கள சமூகத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரபலமடைய தொடங்கினார். ஐக்கிய தேசியக் கட்சியுடனான மோதலின் பின்னர் பொதுஜன பெரமுனவிலும் சிறிசேன பிரபலமானார். சிங்கள சமூகத்திலும் பிரபலமானார்.

இது அமெரிக்காவின் திட்டத்திற்கு பெரிய தடையாக அமைந்தது. ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் நடந்த தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டம் என வீரவங்ச உள்ளிட்டோர் கூறினர். அதுதான் உண்மையான கதை.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டு நாட்கள் செல்லவில்லை. தான் ஜனாதிபதியாகி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச கூறினார். வீரவங்ச கூறியது போல் ஈஸ்டர் தாக்குதல் அமெரிக்காவின் சதித்திட்டம். மைத்திரிபால சிறிசேனவை முடிவுக்கு கொண்டு வந்து, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம். அமெரிக்காவின் திட்டம் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் திட்டங்களின் இது இறுதிக் கட்டம். அதுதான் எப்படியாவது கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவது. நாட்டின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சை அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவிற்கு பெற்றுக்கொடுப்பது. வீரவங்ச கூறுவது போல் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவ தளத்தை இங்கு அமைக்க திருகோணமலை வரை காணிகளை அமெரிக்காவுக்கு பெற்றுக்கொள்வது. இதன் பின்னர் உலக போரை இங்கிருந்து அமெரிக்கா வழிநடத்தும்.

இதன் காரணமாகவே 70 வயதான நோயாளி முதியவரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சித்து வருகிறது. அவரது மனைவியும் மகனும் இன்னும் அமெரிக்க பிரஜைகள் என்பதால், அவர்களை பிணை கைதிகளாக வைத்துக்கொண்டு, கோத்தபாய - பசில் ஆகிய அமெரிக்க பிரஜைகள் மூலம் இலங்கையை தனது காலனியாக மாற்றுவதே அமெரிக்காவின் திட்டம்.

இந்த சதித்திட்டத்தில் இருந்து நாட்டையும் அமெரிக்காவின் வீட்டுக் காவலில் இருக்கும் கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோரின் குடும்பங்களையும், சிரிப்பு மருந்து அருந்தியுள்ள வீரவங்ச உட்பட தேசப்பற்றாளர்களை காப்பாற்றவும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன்னோக்கி வர வேண்டும்.

அப்படி வந்து எந்த நிபந்தனைகளும் இன்றி அமெரிக்க பிரஜையை தோற்கடிக்க வேண்டும். கோத்தபாய ராஜபக்சவை நேசிக்கும் அமெரிக்க சதித்திட்டங்களுக்கு எதிரான மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க பிரஜை அல்லாத இலங்கை பிரஜை ஒருவரை தமது ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் தர்ஷன தந்திரிகே கோரிக்கை விடுத்துள்ளார்.