கோத்தபாய அணியில் இனவாதத்தை தூண்டும் பிரதான நபர் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச அணியின் பேச்சாளர்கள் சிலர் மேடைகளில் அடிப்படைவாதத்தை பரப்பி, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அணியின் பேச்சாளர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இனவாதம் , மதவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர்.

விமல் வீரவங்சவே, கோத்தபாய ராஜபக்சவின் அணியில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் பிரதான நபர். யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் முதலில் தமிழ் எழுதப்பட்டுள்ளது எனக் கூறி பாரதூரமான வகையில் இனவாதத்தை தூண்டும்படி பேசினார்.

இவர்கள் தவளை இனவாதிகள், மகிந்த ராஜபக்ச போன்ற 40 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடும் நபருக்கு இந்த தவளை இனவாதிகள் நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதம் புரிய வேண்டும். இது அவர்களின் அரசியல் பயணத்திற்கு பாரதூரமான பிரச்சினை.

விமல் வீரவங்சவுக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால், சிங்களமும், தமிழும் நாட்டின் தேசிய மொழிகள் அந்த மொழி பேசுவோர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவர்களின் கலாசாரத்திற்கு அமைய அவர்களின் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும்.

விமான நிலையத்தில் தமிழ் மொழி முதலில் எழுதப்பட்டது இனவாதமாம். யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் உள்ள கட்சியின் பெயர் பலகையில் முதலில் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. தமிழ், யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி.

இது கோத்தபாய ராஜபக்ச செல்லும் திசையை காட்டுகிறது. மீண்டும் இனவாதத்தை நோக்கி பயணிக்கின்றனர். இதனையே நாங்கள் கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியிலும் பார்த்தோம் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.