விடுதலைப் புலிகள் என அப்பாவி மக்களைக் கொன்ற கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம்! ஈரோஸ்

Report Print Navoj in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுக்களுக்கும் பொறுப்புக்கூற ஆளாகியிருக்கும் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தாம் தேர்தல் பற்றிய எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்ணம் இராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார, கலாச்சாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய தமது எதிர்பார்ப்புக்களை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாட்டை கேட்டறிந்ததுடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இறுதி முடிவை விரைவில் வெளியிடவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற ஆளாகியிருக்கும் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தாம் தேர்தல் பற்றிய எவ்வித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப்போவதில்லை.

கோத்தபாய ராஜபக்சவைவிட வெற்றி வாய்ப்பு குறைவாகவுள்ள ஏனைய வேட்பாளர்களுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுவதென்பது அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதால் அதனைத் தற்போதைக்கு தவிர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம்.

இந்தநிலையில் ஈரோசில் உறுப்பினராகவிருந்த சரவணபவான் ஜெயானந்தன் (துசியந்தன்) வவுனியாவில் ஈரோஸ் என்ற பெயரில் ஒரு சிறிய குழுவாக இயங்குவதுடன் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காக அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கும் மீளாளுமை செய்யப்பட்டுள்ள ஈரோசிற்கும் அதன் வெகுஜன முன்னணியான ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

இறுதி யுத்தத்தின் பின்னர் தனது மகனுடன் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை பாலகுமாரன் அவர்களின் தலைமையில் 1989ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் வெகுஜன அமைப்பாக கலப்பை (ஏர்) சின்னத்துடன் உருவாக்கப்பட்ட ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் வேலுப்பிள்ளை பாலகுமாரன் அவர்களே இருந்தார்.

ஆயினும் 2007ஆம் ஆண்டு இராஜநாதன் பிரபாகரன் என்பவர் தவறான முறையில் அப்போதைய ஆளும் கட்சியின் அனுசரனையோடு ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சிக்கு தன்னைத்தானே செயலாளராக்கிக் கொண்டார்.

ஆனால் தேர்தல் ஆணையாளரால் தற்போது ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி அதன் பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக இராஜநாதன் பிரபாகரன் தொடர்ந்தும் செயற்படமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers