வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சஜித் அறிவித்துள்ள வரப்பிரசாதம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலிதேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

வெளிநாடுகளில் பணிபுரியும் எங்களது மக்களுக்கு நிவாரணத் திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளேன்.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்கள். நாட்டினுள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றனர்.

இதன் காரணமாக வௌிநாட்டில் இருக்கும் எமது ஊழியர்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை செயற்படுத்துவது எனது கடமையென்ற வகையில், வௌிநாட்டில் தொழில் புரியும் இந்நாட்டு பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளேன்.

அவர்கள் இலங்கைக்கு வரும் போது அவர்களுக்கு நிவாரண முறையின் கீழ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு விசேட வரிச் சலுகை ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும்.

வௌிநாட்டில் தொழில் புரிந்தாலும் அவர்களும் இந்நாட்டு குடிமக்களே. அவர்களுக்கும் வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உரிமையை பெற்றுக் கொடுக்க இந்நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் என்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்குவேன். அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய வகையில் எமது அரசாங்கம் இருக்கும்.

போதை பொருள் வியாபாரம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எந்ததொரு தயக்கமும் காட்டப்போவதில்லை என்றார்.