மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணம் விஜயம்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட லலித்,குகன் வழக்கில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னிலையாக முடியாதென தெரிவித்திருந்த கோத்தபாய ராஜபக்ச, தற்போது பிரசாரத்திற்கு அங்கு விஜயம் செய்கின்றார்.

எதிர்வரும் 28ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அவருடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவும் விஜயம் செய்யவுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2012ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வைத்து முன்னிலை சோஸலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்திச்செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும் தனக்கு யாழ்ப்பாணத்திற்குச் செல்ல பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குறித்த வழக்கில் கோத்தபாய முன்னிலையாகதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எவ்வாறாயினும், நீதிமன்றத்திற்கு முன்னிலையாக முடியாத அளவுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணிகள், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு யாழ்ப்பாணத்திற்கு வரும்போது கண்களுக்குத் தென்படுவதில்லையா என்று லலித் மற்றும் குகன் செயலாற்றியிருந்த முன்னிலை சோஷலிசக் கட்சியின் கேள்வி எழுப்பியுள்ளது.

Latest Offers