நாட்டில் வெள்ளை வான் பயத்தை போக்கியது ஐக்கிய தேசியக் கட்சியே!

Report Print Mubarak in அரசியல்

சஜித் பிரேமதாஸவின் தலைமையில் சிறந்ததொரு நல்லாட்சியை ஏற்படுத்த அனைத்து சிறுபான்மை மக்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சோனக வாடிப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களுடனான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியையும் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையுமே சாரும்.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இளைஞர்களுக்கு எப்போது வெள்ளை வான் வருமோ, எப்போது கடத்துவார்களோ என்ற அச்சம் காணப்பட்டது. அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். பாடசாலைகள், பாலங்கள், வீதிகள், பல்வேறு வகையான கட்டிடங்கள் அனைத்தையும் மேற்கொண்டது எமது அரசாங்கமே. அத்தோடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் அனைத்தையும் வழங்கியுள்ளது.

இந்நாட்டில் தற்போது நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் தேர்தலை எதிர்நோக்கி வருகின்றோம். இவ்வேளையில் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாட்டினை அதிகார வர்கத்திற்கு கையளிக்க வேண்டுமா! அல்லது ஜனநாயகத்தினை ஏற்படுத்த வேண்டுமா என்று மக்கள் தான் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

சஜித் பிரேமதாஸ இளம் துடிப்புள்ள அமைச்சர். அவர் அமைச்சராக இருக்கின்ற போது வீடு இல்லாத ஏழை மக்களுக்கு பல்லாயிரக் கணக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தான் அதிகமாகும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நவ்பர், திருகோணமலை நகர சபை உறுப்பினர் எம்.சனூன்,ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட முகாமையாளர்களான ஏ.எம்.மஹ்ரூப், டி.சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.