சஜித் பிரமேதாசவை வெற்றி பெற வைக்க வேண்டும்! எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

Report Print Navoj in அரசியல்

அனைவரும் ஒன்றுப்பட்டு எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பன ஒன்றிணைந்து சஜித் பிரமேதாசவை வெற்றி பெற வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

எதிர்காலத்திலே இந்த சமூகம் நாட்டிலே தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற முனைப்புக்கு, கல்குடா தொகுதியிலே இருக்கின்ற அனைத்து இளைஞர்களும் இந்த போராட்டத்திலே கை கோர்க்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நாட்டிலே இருக்கின்ற முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்களை பாதுகாத்துக் கொள்கின்ற தேர்தல் இது. வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்கின்ற தேர்தல் அல்ல.

இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான தேர்தல் இது என்பதை மறந்து விடாதீர்கள்.

நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அதிக சேவைகள் செய்ய வேண்டும் என்று வாக்களித்து அனுப்பப்பட்ட தலைவர்கள் நாங்கள்.

ஆனால், இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை வருகின்ற பொழுது அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இராஜினாமா செய்து, முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்த நாங்கள் சொல்கிறோம், வருகின்ற தேர்தலிலே எல்லோரும் ஒட்டு மொத்தமாக சஜித் பிரமேதாசவை ஜனாதிபதியாக்குவதற்கு அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று, இந்த இடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன்.

இனிவர இருக்கின்ற காலக்கட்டம் மிகவும் பிரச்சினைக்குரிய காலக்கட்டம். இந்த நாட்டிலே முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியுமா? இல்லையா? என்ற பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்றோம்.

நாம் இங்கு வாழமுடியுமா? அல்லது வியட்னாமைப் போன்று நாங்கள் ஆக்கப்பட்டு விடுவோமா? எங்களது பள்ளிவாசல்கள், சொத்துக்கள், இருப்புக்கள் அபகரிக்கப்பட்டு விடுமோ என்று யோசிக்கின்ற அளவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லும் இனவாதம் பேசுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அளிக்கின்ற வாக்குகள் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அளிக்கப்படுகின்ற வாக்குகளாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் எதிர்தரப்பினருடைய சதிவலைக்குள் சிக்காமல் எமது சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் விழிப்பாக இருந்து ஜனாதிபதி தேர்தலிலே செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers