பாரிய புரட்சியை ஏற்படுத்த தயாராகும் சந்திரிக்கா! சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் வருகையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் புரட்சிகள் பல நடக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேரடியாக கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிராம மட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவின் தலைமையில் மற்றுமொரு குழு அமைத்துள்ளது. அவர்கள் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்த ஒரு தரப்பிற்கு ஆதரவு வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் இந்த நபர்கள் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் தீர்மானமிக்க சக்தியாக சந்திரிக்கா குமாரதுங்கவே செயற்பட்டுள்ளார்.

அவர் இலங்கை வந்த பின்னர் அனைத்து சக்திகளை இணைத்துக் கொள்ள ஆயத்தமாகியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் மாற்றுவதற்கான பலம் சந்திரிக்காவிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்திரிக்காவின் வியூகங்கள் மூலம் அது மாற்றியமைக்கப்பட்டால், ஜனாதிபதி தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.