நாடாளுமன்றத்தை வயோதிபர் மடத்திற்கு ஒப்பிடும் ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Navoj in அரசியல்

இலங்கை நாடாளுமன்றத்திற்கு சென்றால் ஒரு வயோதிபர் மடத்திற்கு செல்வது போன்று காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் நேற்றிரவு, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாட்டில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டில் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டினை 34ஆண்டுகள் ஆட்சி செய்தது. மீண்டும் இந்தக் கட்சிகள் வந்தன. மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கோரி நின்றன.

கோத்தபாய பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். சஜித் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தார் என்ன செய்தார். இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? இவர்களால் முடியாது.

பொருளாதாரம் வீழ்ச்சி, யுத்தத்தினை ஏற்படுத்தினார்கள், கல்வியைச் சீர்குலைத்தார்கள், சுகாதாரத்தை சீர்குலைத்தார்கள், விவசாயத்தை சீரழித்தார்கள், கந்தளாய் சீனித் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை என சிலவற்றை விற்றார்கள், சிலவற்றை வாங்குகிறார்கள்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருக்கின்றதா? தற்போது அது இல்லை. இதனை மூடி நாசம் செய்தார்கள். இவர்கள் உங்களுக்கு வேண்டுமா?

இந்த நாட்டிலே ஆட்சி செய்தவர்கள் நாசம் செய்து விட்டார்கள். இந்த நாட்டினை கட்டியெழுப்ப, இந்த நாட்டினை மாற்ற இந்த நாட்டில் புதிய ஆட்சியொன்று தேவைப்படுகின்றது.

அதற்காக எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. நாங்கள் இந்த நாட்டினை கட்டியெழுப்புவோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். 30 ஆண்டு யுத்தத்தினால் எமது நாடு சீர்குலைந்துள்ளது, இன்னும் எமக்கு யுத்தம் வேண்டுமா? இந்த நாட்டில் 71 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள்? இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை செய்தார்கள், நாட்டை நாசமாக்கினார்கள்.

இந்த நாட்டில் நாங்கள் ஒன்றுபடாமல் முன்நோக்கிச் செல்ல முடியாது. யுத்தம் செய்துக் கொண்டு, சண்டை பிடித்துக் கொண்டு நாங்கள் முன்னோக்கிச் செல்ல முடியுமா?

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக இருக்கின்றார்கள்.

அடிப்படைவாதிகள் எமது நாட்டை சீர்குலைத்தார்கள். முதலில் இனவாதி கோடு இருக்கக் கூடாது. நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் எந்த பேதமும் இல்லாமல், இனவாதம், அடிப்படைவாதங்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம். நாங்கள் எங்களோடு இனவாதிகள், அடிப்படைவாதிகளை வைத்துக் கொள்வதில்லை.

தற்போது கோத்தபாய, சஜித் அடிப்படைவாதத்துடன் உள்ளது. இந்த அடிப்படைவாதிகள் உருவாக்கும் நாடு என்ன. இந்த நாட்டில் அடிப்படைவாதம், மதவாதம், இனவாத்தினை தோற்கடிக்கும் ஒரே ஒரு இயக்கம் தேசிய மக்கள் சக்திதான்.

நாட்டில் வாழும் மூவின மக்களும் தங்களது மொழியில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கும், தங்களுக்கு வரும் பதில்களும் உங்களது மொழியில் கிடைப்பதற்கான நாட்டை உருவாக்குவோம்.

2015ஆம் ஆண்டு நாங்கள் மகிந்தவை தோற்கடித்தோம். பசில் ராஜபக்ச துண்டை கழற்றி விட்டு அமெரிக்காவுக்கு ஓடினார். கோத்தபாய ராஜபக்ச யானைகளை சரணாலயத்தில் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு போனார்.

மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறினேவிடம் இரண்டு கைகளால் ஒப்படைத்து விட்டு சென்றார்.

ராஜபக்ச குடும்பத்தினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச ஆகியோர் காப்பாற்றுகின்றனர். 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்த ராஜபக்சவிற்கு ஒட்சிசன் வழங்கியது யார்? சஜித் பிரேமதாச. நீங்கள் கோத்தபாயவை தோற்கடித்து சஜித்தினை வெற்றி பெறச் செய்வீர்கள்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் வருவார்கள் எங்களை மன்னித்துக் கொடுங்கள், ஐந்து வருடங்கள் வேலை செய்ய முடியாமல் போய் விட்டது. எமது பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எமக்கு எதிரி இருக்கின்றான் அவரை தோற்கடிக்க வாக்களியுங்கள் என்பார்.

ஆனால், கோத்தபாயவை காப்பாற்றியவர் சஜித். நாடாளுமன்றத்தில் கோத்தபாயவிற்கு எதிராக ஏதும் பேசினாரா? முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது சஜித் பேசினாரா? எங்கே போனார்? இவர் கோத்தபாயவின் நண்பன்.

மக்களை துன்பப்படுத்தும் போது, ஊடகவியலாளர்களை கொலை செய்யும் போது சஜித் எங்கே போனார். ஆனால், நாங்கள் உங்களுக்காக எப்பவும் பேசிக் கொண்டிருக்கின்றோம். சஜித் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றார்.

தேர்தல் பிரசாரத்தில் கோத்தபாயவின் பெயரை உச்சரிக்காமல் எதிர் வேட்பாளர் என்றுதான் கூறுகின்றார். கோத்தபாயவை தோற்கடித்து சஜித்திற்கு வழங்குவதை விட கோத்தபாயவிற்கு வழங்கலாம். இருவரும் ஒருவர்தான்.

இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்ல நாட்டினை உருவாக்க முன்வர வேண்டும். இந்த நாட்டினை ஆட்சி செய்பவர்கள் யார் வயோதிபர்கள் தான். நாடாளுமன்றதிற்கு சென்றால் எங்களுக்கு விளங்குவதில்லை. ஒரு வயோதிபர் மடத்திற்கு செல்வது போன்று காணப்படுகின்றது.

வயது போனவர்கள் செய்வதற்கு வேலை உள்ளது. அது நாடாளுமன்றம் இல்லை. அவர்களுக்கு காதுகள் கேட்பது குறைவு. இந்த நாடு சிறந்த நாடா? எங்களுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் சட்டத்தினை உருவாக்குவொம் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களை வரமுடியாது எனும் சட்டத்தினை உருவாக்குவோம்.

வீட்டில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுங்கள். புதிய தலைமுறையினருக்கு நாட்டை வழங்குங்கள். இந்த வேலைத் திட்டங்களை நாங்கள் மேற்கொள்வோம்.

நாட்டில் இடைநடுவில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் விலை 500 கோடியை தாண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துரெத்தி, ஜயவர்த்தன பல்கலைக் கழக விரிவுரையாளர் அனில் ஜெயந்த, நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் தேசிய அமைப்பாளர் எம்.நஜாமுகமட், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.