மீண்டும் கோத்தபாய ராஜபக்சவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு விடுக்கும் சவாலை ஏற்காமல் தொடர்ந்தும் விலகி செல்வதால், தனியாக வர அச்சம் என்றால் சகோதரரான மகிந்த ராஜபக்சவையாவது அழைத்து கொண்டு விவாதத்திற்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் கோத்தபாயவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரத்தினபுரி - கொலன்ன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எனது எதிரணி வேட்பாளர் ஊடகங்களுடன் பேசப் பயப்படுகிறார். அப்படியானால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்.

சுயாதீனமான இடத்தில் விவாதத்தை நடத்தலாம். தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த போது பெப்ரல் அமைப்பு நடத்திய ஜனாதிபதி வேட்பாளர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிக்கு கூட அவர் வரவில்லை.

அங்கு எவரும் அமராத நாற்காலி இருந்தது. ஏனைய அனைத்து வேட்பாளர்களும் வந்தனர். நானும் சென்றேன்.

என்னுடன் தனியாக விவாதத்திற்கு வர அச்சம் என்றால் அண்ணனை கூட அழைத்து வாருங்கள். பரவாயில்லை, நான் தனியாக எதிர்கொள்கிறேன்.

ஒரு அண்ணன் போதாது என்றால், முன்னாள் சபாநாயகரையும் அழைத்து வாருங்கள். பசிலையும் அழைத்து வாருங்கள்.

அதுவும் போதாது என்றால், நாமல் ராஜபக்சவையும் அழைத்து வாருங்கள். இவர்களும் போதாது என்றால், முழு குடும்பத்தையும் அழைத்து வாருங்கள்.

சஜித் பிரேமதாச வீர சிங்கம் போல் தனியாக எதிர்கொள்ள தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.