கோத்தபாய வந்தால் நாட்டின் பெண்களுக்கு ஏற்படும் தலைவிதியை எண்ணிப் பார்க்க முடியாது - சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிரணி வேட்பாளர் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பெண் சந்ததியினருக்கு ஏற்பட போகும் தலைவிதியை எண்ணிப் பார்க்க முடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை கும்புறுப்பிட்டிய நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிரணி வேட்பாளர் பாதுகாப்பான நாட்டை உருவாக்க போவதாக கூறுகிறார். எனினும் அவர் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 100 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்பதை அவர் மறந்து விட்டார்.

இவ்வாறான சம்பவம் நடந்த போது கோத்தபாய ராஜபக்ச எங்கிருந்தார். எதிரணி வேட்பாளராக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அப்பாவி பெண் சந்ததியினருக்கு மீண்டும் ஏற்பட போகும் தலைவிதியை எண்ணிப் பார்க்க முடியாது.

நாடு செல்லும் பயணத்தை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது. நான் நாட்டை ஆட்சி செய்ய வரவில்லை. நாட்டுக்கு சேவை செய்ய வருகிறேன். இந்த ஜனாதிபதி பதவி எனக்கு உரிமையானது அல்ல. அது பொது மக்களுக்கும் நாட்டுக்கு சேவைகளை செய்ய சக்திமிக்க ஆயுதம். அதனை ஆயுதம் என்று கூறினாலும் அது மக்களை அழிக்க பயன்படுத்தப்படுவது அல்ல.

எதிரணி வேட்பாளரை போன்று குடிக்க தண்ணீர் கேட்பவர்களை சுட்டுக்கொல்ல மாட்டேன். எரிபொருள் மானியத்தை கோரியும் ஊழியர் சேமலாப நிதியை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் போது துப்பாக்கி பிரயோகம் செய்து அடக்கி, அச்சுறுத்த மாட்டேன். கடந்த காலத்தில் போன்று கொலை கலாசாரம் எமது ஆட்சியின் கீழ் இருக்காது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்தரன உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.