ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சி நடந்து ஓராண்டு நிறைவு: பிரதமரின் விசேட அறிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசியல் சூழ்ச்சி நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆளுமையை மதிக்கும் அனைவருக்கும் இன்றைய தினம் மிக முக்கியமான தினம்.

கடந்த ஆண்டு இதே தினத்தில் மக்கள் ஆணையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒன்றை நாட்டின் அரசியலமைப்பு சூழ்ச்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்த அரசாங்கத்தை எந்த காரணமும் இன்றி கவிழ்த்தனர்.

எனினும் 52 நாட்களுக்கு பின்னர், சூழ்ச்சியை தோற்கடித்து மீண்டும் ஜனநாயகம் ஏற்படுத்த எம்மால் முடிந்தது.

இந்த போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைத்து இன மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது நாங்கள் தனிப்பட்ட ரீதியில் பெற்ற வெற்றியல்ல.

எமது அரசாங்கம் மட்டுமே பெற்ற வெற்றியல்ல.சூழ்ச்சியை தோற்கடிக்க ஒன்று கூடிய மக்கள் மட்டுமே பெற்ற வெற்றியல்ல. முழு இலங்கையும் இதன் மூலம் வெற்றி பெற்றது.

எந்த இரத்த சிந்தல்களும் இல்லாது, சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சூழ்ச்சியை தோற்கடித்தமையானது எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தியதன் காரணமாகவே இந்த வெற்றியை பெற முடிந்தது. இதன் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சுதந்திரம் மற்றும் சுயாதீன சூழல் இந்த வெற்றிக்கு காரணம்.

சுயாதீன நீதித்துறை, சுயாதீன பொலிஸ், சுயாதீன அரச சேவை போன்ற பல நிறுவனங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டதுடன் பலமிக்கதாக மாற்றப்பட்டன எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.