தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்

Report Print Dias Dias in அரசியல்

ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும், இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி இயற்கையெய்தியுள்ளார்.

தனது 67 வது வயதில் இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொன்மைகளை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளதுடன், நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் கூட தனது ஆய்வுப்பணியை கொண்டு தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

அன்னாரின் மறைவு என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் இறுதிக் கிரியை 2019.10.27 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி,ப 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை இடம்பெறும் கேதாரகௌரி விரதம், கந்தசஷ்டி விரத பூசை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இறுதிக் கிரியையினை ஞாயிற்றுக்கிழமை பி,ப,1.00 மணிக்கு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கன்னன் குடாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலியினைத் தொடர்ந்து கன்னன் குடாவில் அமைந்துள்ள அன்னாரின் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.