கோத்தபாயவின் நிகழ்வில் சீன தூதுவருக்கு முன்னுரிமை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நேற்றுக் காலை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில், பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்கள், துறைசார் வல்லுனர்கள், பங்கேற்றிருந்தனர்.

சீன தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீன இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சீன தூதுவருக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் வரிசையில் முதல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த நிகழ்வு மேடையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், மருத்துவ கலாநிதி அனுருத்த பாதெனியவும் கலந்து கொண்டார்.

அரசாங்க பணியாளர்கள் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என்ற போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்றமை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீன தூதுவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச தர்ப்பினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் மீண்டும் சீனாவின் தாக்கம் இலங்கையில் அதிகளவில் இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் முகமாக கோத்தபாயவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீன அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தான் அதிகாரத்திற்கு வந்தால் இந்தியாவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தவுள்ளதாக தனது தேர்தல் அறிக்கையில் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers