பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர் தொடர்பான விடயம் உண்டு! டக்ளஸ் தேவானந்தா

Report Print Theesan in அரசியல்

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர் தொடர்பான விடயம் இல்லையென்பது பொய்யான விடயம் என யாழ்.மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா வாடி வீட்டில் ஈ.பி.டி.பி கட்சியினால் அடுத்த மாதம் 3ம் திகதி நடாத்தப்படவுள்ள மாநாடு மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் சம்பந்தமாக கட்சியின் உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றிற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக வழமை போன்று பொய்யான பிரச்சாரங்கள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் மொழியில் இன்னும் வரவில்லை என்பது உண்மையே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சொல்லப்படவில்லை என்பதல்ல.

நாங்கள் எங்களது பிரச்சாரங்களில், ஈபிடிபி கட்சியின் வெளியீடுகளிலே நாங்கள் என்னென்ன விடயங்களை கதைத்திருக்கிறோம். என்னென்ன விடயங்களை வைத்திருக்கின்றோமென்று பல தடவைகள் சொல்லியிருக்கிறோம்.

நாங்கள் என்னென்ன பிரச்சினைகளை என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தோமோ அது எல்லாம் பெரும்பாலும் உள்ளடங்கியதாகவே இத்தேர்தல் விஞ்ஞாபனம் வந்திருக்கின்றது.

குறைபாடு என்னவென்றால் உடனடியாக தமிழ் மொழியில் வழங்க முடியவில்லை என்பதே. இன்னும் ஒர் இரு நாட்களில் தமிழ் மொழியில் வெளிவரும் போது பார்க்க கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு இணையத்தளம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றும் இல்லை எல்லாம் புறக்கணிப்பென்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அதன் பின் அந்த இணையத்தளம் தமிழ் அரசியல் பிரமுகர் வெளியிட்டதாக செய்தி வெளியிட்டதாகவும் அவருடைய கோரிக்கைகள் உள்ளடங்கியுள்ளதாகவும், கூறி செய்தி வெளியிட்டிருந்தது.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போன்று அரசியல் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக, காணி, நிலங்கள் விடுவிப்பு சம்மந்தமாக, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவது தொடர்பாகவும், காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் காணுவது தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிவந்துள்ளது. ஆகவே எது வரவில்லை என்று எதை வைத்து சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

அரசியல் தீர்வு என்றால் எங்களுடைய அரசியல் யாப்பிலே இருக்கின்ற விடயம் அதாவது மாகாணசபை முறைமை. ஆகவே இருக்கின்ற ஒன்றை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. அது அவ்வாறே நடைபெறும். ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற தேர்தல் அல்லது மாகாணசபை தேர்தலுக்கு செல்வார்கள். நாங்கள் நீண்டகாலமாக கூறிவருகின்றோம்.

ஏற்கனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் ஊடாக இலங்கை, இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு கிடைத்தது. இந்த மாகாணசபை முறைமையானது அரசியல் யாப்பில் உள்ளது.

அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்கோ அல்லது சர்வஜன வாக்கோ தேவையில்லை. இதை தென்னிலங்கை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால் தென்னிலங்கை மக்கள் அதனை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அத்தோடு இந்தியாவினுடைய பக்க பலமும் இருக்கின்றது. ஆனால் சின்ன ஒரு குழப்பமும் இருக்கின்றது. அதாவது ஆறு தமிழ் கட்சிகள் கூடிய போதும் ஒரு கட்சி ஏதோ ஒரு காரணத்தை கூறி விலகிச்சென்றுள்ளது. மீதி ஐந்து பேர் ஏதோ ஒன்றை கையெழுத்து போட்டுள்ளனர்.

இதில் நிர்ப்பந்தம் காரணமாகவும், கையெழுத்து போட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் வாக்குகளை அபகரிக்கின்ற நோக்கம் ஒன்று. அடுத்து தென்னிலங்கையில் ஒரு இனவாத சூழலினை ஏற்படுத்துவது இன்னொன்று.

இதன் ஊடாக அவர்கள் இழந்து போன செல்வாக்கை மீட்டுக்கொள்வதும் வாக்குகளை அபகரிப்பதும்தான் நோக்கமாக உள்ளது. மற்றும் படி அதில் பெரிதாக சொல்லக்கூடிய மாதிரி எதுவும் இல்லை.

தமிழ் காங்கிரஸ் உட்பட ஆறு தரப்பும் ஒன்றாகதான் இருந்தன. அதன் பிறகு மூன்று நாளாக பிரிந்து விட்டனர். அதன் பின்னரும் ஒன்று சேர்ந்திருந்த போதும் அதில் ஒரு கட்சி பிரிந்து செல்ல மிகுதி இரண்டு கட்சியும் இணைந்துள்ளன.

இவ்வாறான நிலைமையில் இரண்டு மூன்று நாட்களிற்கு முன் நடைபெற்ற கூட்டத்திற்கு இரண்டு கட்சி சமூகமளிக்காவில்லை. இதன் காரணமாக 30ம் திகதி கூடியே ஆராயப்போவதாக சொல்லப்படுகிறது.

இன்றைய நிலையில் இப்படியான விடயங்கள் வரும். ஆனால் அது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. தாங்கள் கொண்டு வருவதை ஏற்கமாட்டார்கள் என்று இதில் கையெழுத்து போட்டவர்களே தங்களுடைய பேட்டிகளில் கூறுகின்றனர். இவர்கள் கூடியது ஒரு பொது தமிழ் வேட்பாளரை தெரிவு செய்வதற்காகவே கூடியிருந்தனர்.

அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது தமிழ் வேட்பாளராக சிவாஜிலிங்கம் தான் இருக்க முடியும். உண்மையில் சிவாஜிலிங்கத்திற்கு தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும் சிவாஜிலிங்கம் வெல்லுவாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக சொல்லவில்லை என்று வழமை போன்றே ஒரு பொய் பிரட்டு வெளிவந்திருக்கின்றது.

இந்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார் இந்த ஐந்து கட்சிகளின் கூட்டு இந்தியாவினுடைய அழுத்தம், இந்தியாவினுடைய கருசனைக்காக தான் கூடி முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று.

அரசிற்கு நான் மேலதிகமான ஆதரவை வழங்கி வந்தேனே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் அரசிற்கு முட்டுக்கொடுப்பவராக இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நான்கரை வருடத்திற்கு மேல் எல்லா வரவு செலவுத்திட்டத்திற்கும், முழு ஆதரவு கொடுத்து அதில் பங்காளியாக இருந்தது போல் அரசிற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கவில்லை.

அது அவர்களுடைய ஆதங்கம் அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். நான் அந்த வலியை உணராதவன் அதில் பாதிக்கப்படாதவன் என்று அல்ல. காணாமல் போன உறவுகளின் பிரச்சினையை விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வேன். இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே ஏதாவது மக்களுடைய பிரச்சினைகள் தவறவிடப்பட்டால் அல்லது கருத்தில் எடுக்கப்படாமல் இருந்திருந்தாலும், நாங்கள் ஆட்சியில் பங்கெடுக்கின்ற போது கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டோமோ வருங்காலத்திலே விடுபட்டு போன பிரச்சினைகளை கருத்தில் எடுத்து அதற்கும் நாங்கள் நிச்சயம் தீர்வு காண்போம் எனவும் தெரிவித்துள்ளார்.