ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு!

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதற்கு எதிர்வரும் 3ம் திகதி வரை சிவாஜிலிங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், விலகத் தவறினால் ஒரு ஒழுங்கு விசாரணைக்கு முன்னோடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை தலைமைக்குழு வழங்கியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தொடர்ந்து ஆராயப்பட்டது. ஐந்து கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக ஏனைய நான்கு கட்சிகளுடனும் இணைந்து தமிழீழ விடுதலை இயக்கம் செயற்படும். வரும் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பினை ஒன்றியத் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இது ஒரு கலந்துரையாடல் மாத்திரமே. அதனைத் தொடர்ந்து 30ம் திகதி ஐந்து கட்சித தலைவர்களும் கூடி கலந்துரையாடி சில முடிவுகளை எடுக்கவிருக்கிறார்கள். எங்களுடைய 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக சில பிரதான வேட்பாளர்களிடம் இருந்து கருத்துக்கள் ஊடகங்கள் ஊடாக வெளிவந்திருக்கின்றன.

இருந்தாலும் கூட அவர்களுக்கு முன்னால் இந்தக் கோரிக்கைகள் குறித்து நாம் கலந்துரையாட விரும்புகின்றோம். அவர்கள் விரும்பினால் இந்த சந்திப்புக்கள் நடக்கும். எங்களுடைய கோரிக்கைகள் மூன்று பிரதான கட்சி வேட்பாளர்களிடையேயும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ஐந்து கட்சிகளின் ஒற்றுமையை பேணிப் பாதுகாப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை சந்தித்த பின்னர் சில முடிவுகளை நாங்கள் இந்த நாட்டிற்கும், எமது மக்களுக்கும் தெரியப்பாடுத்த முடியும் என நம்புகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் நேர்மையாக, ஒற்றுமையாக, உறுதியாக 5 கட்சிகளும் ஒரே கோரிக்கையை முன்வைக்க முடியும்.

இது தவிர, எங்கள் கட்சியினுடைய தவிசாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரை தேர்தலில் இருந்து விலகி நிற்குமாறான எழுத்து மூலமான கோரிக்கையை கடந்த 15ம் திகதி சமர்ப்பித்து இருந்தோம்.

அத்துடன் கட்சியினுடைய அனுமதி பெறாமல், சம்மதம் இல்லாமல் சுயேட்சை வேட்பாளாராக போட்டியிடுவது கட்சியின் அமைப்பு விதிகளுக்கும், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கும் விரோதமானது. அந்தக் காரணத்திற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருப்பின் அதனை எழுத்து மூலமாக கடந்த 19ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தோம்.

அதற்கு பதில் அளித்து சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றினை எனக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் இரு வாரகால அவகாசத்தை மேலும் கோரியுள்ளார். எதிர்வரும் 2ம் திகதி வரையிலேயே கால அவகாசத்தை அவர் கோரியுள்ளார்.

2ம் திகதிக்கு முன்னர் தன்னால் எழுத்து மூலம் பதில் அளிக்க முடியும் எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான அவரது காரணங்களை கோரி நிற்கின்றோம். அதற்கான கடிதம் அனுப்பப்படும்.

அத்துடன் ஏற்கனவே நாம் தெரிவித்தமை போன்று ஜனாதிபதித் தேர்தலில் இருந்து அவர் விலக வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றோம்.

அந்தக் கோரிக்கையும் நாம் அனுப்பும் கடிதத்தில் தெரிவிக்கப்படும். அவர் எதிர்வரும் 3ம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் களத்தில் இருந்து விலகத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த நடவடிக்கை ஒரு ஒழுங்கு விசாரணைக்கு முன்னோடியாக நடைபெறும். அந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கின்ற பொறுப்பை கட்சியினுடைய தலைமைக்குழு தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், செயலாளராகிய எனக்கும் வழங்கியுள்ளது.

எனவே விலகத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தில் கட்சியினுடைய கட்டுப்பாடு கட்டிக்காக்க்கப்பட வேண்டும் என்பதையும், இதில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்பட முடியாது என்பதையும் கட்சித் தலைமைக் குழு முடிவெடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.