கோத்தபாயவை வெல்ல வைக்கும் முகவராக ஹிஸ்புல்லா செயற்படுகிறார்: ஹக்கீம்

Report Print Navoj in அரசியல்
62Shares

சிறுபான்மை சமூகத்தினை அடகுவைத்து அநியாயகார கும்பலுக்கு ஆட்சியை கொடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியை நாங்கள் முறியடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார பொதுக் கூட்டம் கல்குடாத் தொகுதி ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரவு பகலாக சேவை செய்கின்ற, தன்மீது இலஞ்ச ஊழல் இல்லாத ஒரு அரசியல்வாதியான சஜித்தினை கொண்டு வரவேண்டும். முஸ்லிம்களுக்கு அனுகூலமாக இருக்கின்ற நிறைவேற்றதிகார முறையை இல்லாமல் செய்வது.

விகிதாசார தேர்தல் முறையை இல்லாமல் அழித்து விடுவது என்று வரைந்து கட்டிக் கொடுக்கின்ற கும்பலுக்கு வாக்களிப்பது மாத்திரம் அல்ல, அவர்களுக்கு வக்காளத்து வாங்குவதற்கு தானும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்று களமிறங்கியுள்ளவர்கள் சம்பந்தமாகவும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஹிஸ்புல்லா கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைப்பதற்கு அவரது முகவராக செயற்படுகின்றார்.

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு சிறுபான்மை சமூகத்தினை அடகுவைத்து அநியாயகார கும்பலுக்கு ஆட்சியை கொடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியை நாங்கள் முறையடிக்க வேண்டும்.

இதனை முறியடிக்க இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதை விட வேறு வழியில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுக்க ஆரம்பித்து விட்டது. இவர்களது முடிவு தேர்தல் விஞ்ஞாபனம் வெளி வருவதோடு வெளியிடுவார்கள் என்று இந்த நாடு எதிர்பார்ப்புடன் இருக்கின்றது.

இந்த சூழலில் நாட்டிலுள்ள சகல சிறுபான்மை சமூகமும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிகள், அப்பாவி கிறிஸ்தவ சமூகத்திற்கு மேல் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் ஒழிந்து கொண்டிருந்த கும்பலை பயன்படுத்தி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலால் சென்ற ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு காரணமாக இருந்த இரண்டு கூட்டங்களை அரசாங்கத்தின் மேல் கோபமூட்டுகின்ற ஒரு நிலைமைக்கு தள்ளி அதனூடாக தான் கதிரைகளில் அமர்ந்து கொள்ளலாமல் என்பதற்கு வெளி சக்திகளின் அனுசரணையோடு நடத்தப்பட்ட நாடகம்.

இன்னும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வரும். வெளிவர வேண்டும். ஆனால் இவையெல்லாம் மூடு மந்திரங்களாக இருக்கின்ற விடயங்கள். எப்படி நடந்தது என்று விசாரணை செய்த குழுவில் இருந்த பார்த்த போது பல விடயங்களை அவதானித்தேன். வெளியில் சொல்வதற்கு கூட பயமான விடயங்கள் உள்ளது.

இவ்வாறு உளவுத்துறைகள் விடயங்களை மூடி மறைத்துள்ளது. எப்படியெல்லாம் உளவுத்துறைகளை பாவித்து சிறுபான்மை சமூகங்களை பகடைகளாக தங்களது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அரங்கேறிய நாடகங்கள் என்ன என்பதை பார்த்து இருக்கின்றோம்.

எங்களிடம் உள்ள உத்தரவாதம் ஒற்றுமையைத் தவிர வேறு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் தான் இந்த சக்திகளை முறையடிக்க முடியும். அதற்காக நாங்கள் தயாராக வேண்டும். அவ்வாறானால் இந்த வெற்றி எமது சமூகத்திற்கு வரவிருக்கின்ற பாரிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்கான கேடயமாக இருக்கட்டும் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எம்.றியாழ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.