வில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை

Report Print Varunan in அரசியல்
94Shares

வில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கண்டிப்பாக வில்பத்து விடயத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்குவின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜெ.சரீப் தெரிவித்துள்ளார்.

நாகாநந்த கொடிதுவக்குவின் "ஒரு சட்டத்தின் கீழ் பலம் பொருந்திய நாடு' எனும் தொனிப்பொருளில் புதிய அரசியலமைப்பின் அறிமுகமும் ஊடக சந்திப்பொன்றும் நேற்று மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில், அவரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜெ. சரீப் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குலைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் இயற்கை காடுகள் என்பன அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான காடுகள் அழிக்கப்படுவதற்கு அரசாங்கமும் ஊழல்களும் தான் காரணம்.

இவ்வாறு அழிக்கப்பட்ட காடுகளில் முக்கியமானதாக வில்பத்து காணப்படுகின்றது. இன்று தீய சக்திகள் வில்பத்து காடு அழிப்புடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்புடையவர் என்று பல ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து நீதிமன்றில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

ஆனால் கண்டிப்பாக வில்பத்து விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவை மட்டுமல்ல சிங்கராஜ வனமும் அழிக்கப்படுகின்றது.

மத்தளயில் உள்ள பெரும் பரப்பை கொண்ட காடுகள் அழிக்கப்பட்டு தான் மத்தள விமானநிலையம் அமைக்கப்பட்டது. இன்று அந்த விமான நிலையம் எதுவித உபயோகமும் இல்லாமல் உள்ளது. இவைகள் சம்மந்தமாக எவரும் ஒன்றும் பேசமாட்டார்கள்.

மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு சுங்க திணைக்களத்தில் கடமையாற்றிய காலங்களில் இன்றைய போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுங்க வரி செலுத்தாமல் அதி சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதை அனுமதிக்காமல் நாகாநந்த கொடிதுவக்கு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலையீடு செய்ததினால் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

ஆகவே தான் இவ்வாறான அரசியல் அதிகாரங்களை கொண்டு அதிகளவான அரசுடமைகளை துஷ்பிரயோகம் செய்கின்ற அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் என்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்தோடு சிறந்த ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் சட்டத்தரணி தலைமையில் நாங்கள் செயற்படுகின்றோம்.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம் எனும் இலக்கை கொண்டு 2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நாகநந்த போட்டியிட இருந்தார். ஆனால் இவர் போட்டியிட இருந்ததை தடுத்து விட்டனர்.

இன்று நாட்டில் அனைத்தியிலும் ஊழல் பெருகியுள்ளது.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.அரசியல்வாதிகள் பொய் உரைத்து மக்களின் வாக்குகளை பெருகின்றனர். இவர்கள் சொல்லும் நடத்தையில் ஒன்றும் செய்கிறார்கள் இல்லை. நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். மாகாண சபை முறையும் ஒழிக்கப்பட வேண்டும்.

இந்த மாகாணசபை மூலம் குறைந்த நேரமே வேலைகள் இடம்பெறுவதுடன் இதன் மூலம் செலவினங்கள் அதிகமாக உள்ளது.அத்துடன் உள்ளுராட்ச்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் .

கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் பக்கத்து வீதியில் இருக்கின்ற மாணவர்களையே சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பாடசாலை கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் வாகனங்களில் சாரதிகளும் வாகன நடத்துநர்களும் சீருடை அணிய வேண்டிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.

எந்த அரசியல்வாதியும் செல்கின்ற சொல்லை செயலில் காட்டுவதில்லை. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஊழல் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். முஸ்லிம்களுடைய தலாக் சட்டங்கள் எதுவும் இந்த நாட்டில் எழுத்து மூலம் நடைபெறுவதில்லை. வாய்மொழி மூலமே இடம்பெற்று வருகின்றது. ஆகவே சகல இனத்தவர்களும் ஒருமைப்பாட்டோடு இலங்கையர்கள் வாழ தனிநபர் சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும்.

இஸ்லாமிய சட்டம், தேசவழமைச் சட்டம், கண்டிச் சட்டம் என்பதோடு எல்லா தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கி ஒரே நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு செலவினங்களை குறைக்கும் முகமாக அமைச்சரவையின் தலைவராக உள்ள பிரதமர் அவர்களே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக கொண்டு புதிய சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.