பொதுபலசேனா அமைப்பை உருவாக்கி முஸ்லிம்களை அழித்தது கோத்தபாயவே!

Report Print Navoj in அரசியல்
408Shares

பொதுபலசேனா என்ற அமைப்பை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தினை அழிப்பதற்கு திட்டம் தீட்டியவர் தான் கோத்தபாய ராஜபக்ச என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசார பொதுக்கூட்டம் கல்குடாத் தொகுதி ஓட்டமாவடியில் நேற்று இடம்பெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டிலுள்ள எந்தவொரு முஸ்லிம்களும் வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு தகுதியில்லாத கோத்தபாய என்ற பெயரை உச்சரிக்க கூடாது என்று சொல்லுகின்ற அளவிற்கு எமது சமூகம் துரோகியை விளங்கி இருக்கின்றது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தினை இந்த நாட்டில் அடித்து ஒழித்து நசுக்க வேண்டும் என்று திட்டமிட்ட செயலாற்றிய ஒருவர் இன்று முஸ்லிம்கள் மத்தியில் வாக்கு கேட்டு வருகின்றார் என்று சொன்னால் இதனை முஸ்லிம் சமூகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழித்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினை நசுக்கி, அடக்கி விட்டோம் என்று இருந்த கோத்தபாய 2010ஆம் ஆண்டு திட்டமிட்டார் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தினை அடக்க வேண்டு என்ற வரலாற்று துரோகத்தை செய்த கோத்தபாய நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது முஸ்லிம் சமூகத்தினை அழிக்க திட்டமிட்ட போது பொதுபலசேனா என்ற அமைப்பை உருவாக்கி தலைவராக ஞானசார தேரரை கொண்டு வந்து கண்டியில் அலுவலகம் அமைத்து முஸ்லிம் சமூகத்தினை அழிப்பதற்கு திட்டம் தீட்டியவர் தான் கோத்தபாய ராஜபக்ச.

2010ஆம் ஆண்டு ராவணபலபாய என்ற அமைப்பை உருவாக்கினார். நீபலகாய, மசூலபலகாய என்ற அமைப்பை உருவாக்கினார். இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தினை அடித்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பல முஸ்லிம் கடைகள் சேதமாக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை கிழித்தெறிந்தார்கள். இவர்கள் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இருநூறு பேரணிகளை நடாத்தினார்கள்.

இவ்வாறு துரோகத்தனம் செய்து விட்டு கேவலாக எங்கள் முன்வந்து வாக்கு போடுங்கள் என்று கேட்கின்றார்கள். முஸ்லிம் பள்ளிவாயல்கள், கடைகள் என பல சொத்துக்களை சேதப்படுத்திய கோத்தா தற்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வந்துள்ளார் என்று கேட்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.