பிள்ளையான் குழுவை வழிநடத்திய புலனாய்வு அதிகாரி தொடர்பான தகவல் வெளியானது

Report Print Sethu Sethu in அரசியல்
917Shares

நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் விசாரணை கைதியாக உள்ள தமிழ் ஒட்டுக்குழுவை சேர்ந்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை நான் விடுவிப்பேன் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் மீது ராஜபக்ச சகோதரர்களுக்கு தனி பாசம் இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி பலருக்கு தெரியாது. ஆரம்பங்களில் இருந்து பிள்ளையான் கும்பலை ராஜபக்ச சகோதரர்கள் தாங்கள் செய்த பல அரசியல் படுகொலைகள், கடத்தல்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதேபோல பிள்ளையான் கும்பல் சொந்த இலாபத்திற்காக பணம் பறிக்கும் கடத்தல்களை செய்யவும் ராஜபக்ச அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம் என எண்ணற்ற கொடுமைகளை இந்த பிள்ளையான் கும்பல் ராஜபக்ச சகோதரர்களின் துணையுடன் செய்து முடித்தது.

குறிப்பாக பிள்ளையான் கும்பலை மேஜர் ஜெனரல் கபில கெந்த விதாரண என்ற புலனாய்வு அதிகாரியும், அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவுமே வழிநடத்தினர்.

இந்த சம்பவங்களுக்கு எல்லாம் மேலாக ராஜபக்ச சகோதரர்கள் பிள்ளையானை விசுவாசிக்க காரணமான சம்பவம் இதுதான். கடந்த 2007.07.11அன்று ராஜபக்ச சகோதரர்களுக்கு ஓர் சோதனைக் காலம் வந்தது.

2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்புக் கோருவதுதான் அந்தச் சோதனை. இந்த சோதனையில் இருந்து தப்புவதற்கு ராஜபக்ச சகோதரர்கள் நம்பியிருந்தது பிள்ளையானைத் தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக்கூடாது. அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்குச் சரியான ஆள் பிள்ளையான் தான் என்று புலனாய்வுத்துறை மேயர் ஜெனரல் கபில கெந்த விதாரண கூற, பசில் ராஜபக்ச பிள்ளையானை அழைத்து இராணுவ புலனாய்வுத் துறையினர் உதவியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவு வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தாவது அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதை பிள்ளையான் குழு தடுத்தாக வேண்டும் என்பது தான் இலங்கை புலனாய்வு துறையின் எதிர்பார்ப்பாக அமைந்தது.

பசில் ராஜபக்சவின் உத்தரவை ஏற்றுக்கொண்ட பிள்ளையான் வெள்ளை வானில் மேலும் ஐவருடன் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது இல்லங்களுக்குச் சென்றார்.

அங்கு அவர்கள் இல்லையென்றதும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கனகசபையின் மருமகன் சசிகரன் உட்பட்ட உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று சசிகரன் உட்பட்டவர்களை கடத்தி கொண்டு நேராக கொழும்புக்குச் சென்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் ஒரு வானிலும், பிள்ளையான் வெள்ளை வானிலும், இன்னுமோர் வாகனம் பின்னாலுமாக மொத்தம் மூன்று வாகனங்களில் இந்த கடத்தல் நடத்தப்பட்டது.

அந்த காலப்பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கும் அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பிள்ளையான் கும்பல் கடத்த வரும்போது அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் விலகிச் சென்று விட வேண்டும் என்று மேஜர் ஜெனரல் கபில கெந்த விதாரண தரப்பு போலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருந்தார் .

உறவினர்களை கடத்தி வைத்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைப்பேசியில் அழைத்து அச்சுறுத்த தொடங்கினார்கள். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திகாந்தன் தொலைபேசியில் அகப்படவில்லை.

இதை தொடர்ந்து பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த சீலன் என்பவர் திருக்கோவிலில் இருக்கும் எம்.பி. சந்திரகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை மிரட்டினார்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் குடும்பத்துடன் தொலைத்துவிடுவோம். வாக்கெடுப்புத் தினத்தில் அவர் கொழும்பில் தென்படக்கூடாது என்று மிரட்டிவிட்டு வந்தனர்.

அதே தினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிள்ளையான்.

“நான் உங்களுக்கு வேண்டிய ஒருவர்தான் கதைக்கிறேன் ஐயா, நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது, அதைச் சொல்லத்தான் போன் எடுத்தனான்” என அச்சுறுத்தினர் பிள்ளையான்.

கடத்தல் மற்றும் தொலைபேசி வழி அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் ராஜபக்ச சகோதரர்களுடன் பரிமாற்றப்பட்டது.

இத்தோடு ராஜபக்ச சகோதரர்கள் அடங்கி விடவில்லை . தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பலி எடுக்கவும் ஆயத்தமானார்கள்.

இதற்காக நாடாளுமன்றம் செல்லும் வழியில் நிலக்கண்ணி வெடியை புதைத்து இணைப்புக் கொடுக்கவென இராணுவ வல்லுநர் ஒருவரை மேஜர் ஜெனரல் கபில கெந்த விதாரண திருகோணமலையிலிருந்து வரவழைத்திருந்தார்.

அதேபோல பிள்ளையான் மட்டக்களப்பிலிருந்து தனது நம்பிக்கைக்குரிய தேவிகாந், சூட்டி, கண்ணன், வெள்ளையன் மற்றும் வாகன சாரதியுமாக ஐந்து பேரை அழைத்து வந்து இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தல விடுதியிலிருந்து சரியாக 1.5 (ஒன்றரை) கிலோ மீற்றர் தொலைவில் கண்ணி வெடியைப் புதைத்து வெடிக்கச் செய்வதற்காக இயங்கு சக்தியை அருகில் இருக்கும் இராணுவ அரணினுள் இருந்து இயக்குவிக்க வேண்டும் என்று வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இரவு 1.30 நிமிடம் அளவில் நிலக்கண்ணி வெடியை புதைக்க தொடங்கினார்கள்.

ஆனால், இந்த நபர்களது நடவடிக்கைகளில் அந்த வழியாகச் சென்ற சில பொதுமக்கள் பார்த்துவிட்டனர். அந்த பொதுமக்கள் தொலைபேசி மூலம் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

விடுதலைப் புலிகள் தான் கண்ணி வெடி வைக்கின்றனர் என்று பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிஸாரிடம், இந்த நபர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

உடனே புலனாய்வு அதிகாரிகள் தலையிட்டு அடையாள அட்டைகளைக் காண்பித்து அனைவரும் தப்பித்துக்கொண்டனர்.

கொலை முயற்சி வெற்றியளிக்க விட்டாலும் ராஜபக்ச சகோதரர்கள் எதிர்பார்த்த படி வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றி கொண்டார்கள்.

ஜனநாயக விரோதமாக 2008 வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற ராஜபக்ச சகோதரர்களுக்கு துணை நின்றது பிள்ளையான் கும்பல் மற்றும் இலங்கை ராணுவ புலனாய்வு துறையும் தான். இதனால் தான் பிள்ளையான் மீது ராஜபக்ச சகோதரர்களுக்கு தனி பாசம்.