கோத்தபாயவின் கூலிப்படையாக செயற்படும் கருணா, பிள்ளையான் தரப்பு!

Report Print Kumar in அரசியல்
808Shares

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், கருணா அம்மானின் கட்சியினர் கோத்தபாயவின் கூலிப்படையாகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்தால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களிடம் வழங்கப்படும் என சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான அலுவலகம் இன்று பட்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி தலைமையில் இந்த அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் நூறு வீதம் வாழும் தொகுதியாகும். இந்த தொகுதியிலேயே 1994ம் ஆண்டு சந்திரிகா அம்மையாருக்கு 94 வீதம் வாக்களித்த தொகுதியாகும்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு நூறு வீதம் வாக்களிக்கும் என நான் நம்புகின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது தெரியும்.

தமிழ் மக்களின் உரிமைக்காவும் எமது தனித்துவத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடியவர்களை களங்கப்படுத்தி ஒரு கோர யுத்ததினை நடாத்தி உலகில் எங்குமில்லாத மனித உரிமைகள் மீறலை இக்காலத்தில் நடாத்தியிருந்தனர்.

இவ்வாறானவர் இன்று தமிழ் மக்களின் முன்பாகவந்து தமது வாக்குகளை தங்களுக்கு வழங்குமாறு கூறுகின்றார். இது மிகவும் வெட்கக்கேடான விடயம். எந்த தன்மானமுள்ள தமிழனும் தமது வாக்குகளை கோத்தபாய ராஜபக்சவுக்கு அளிக்கமாட்டார்கள்.

இந்த நாட்டில் கோர யுத்ததினை நடாத்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமாக இருந்தவர் இன்று எங்கள் வாசக்கதவினை திறக்கின்றார். மிகவும் கேவலமான விடயமாகும்.

நான் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு கூறுவதை விட ஒரு தன்மானமுள்ள தமிழனாக இருந்துகொண்டு எவரும் கோத்தபாயவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

இன்று இந்த நாட்டில் ஓரு சுதந்திரமான சூழ்நிலை நிலவுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஆட்சியமைத்ததன் பின்னர் எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் நடைபெறவில்லை.

வெள்ளைவான் கடத்தல்கள், கப்பம் பெறுதல்கள்கள் நடைபெறவில்லை. கடந்த காலயுகத்தினை நாங்கள் திரும்பிப்பார்க்கப் போகின்றோமா என்பதை தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குளை அளிக்கவேண்டும்.

இன்று நாட்டில் அமைப்புகள் சுதந்திரமாக இயங்குகின்றன. ஆணைக்குழுக்கள் தமது கடமைகளை சுதந்திரமாக செய்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திரமாக இயங்குகின்றது.

இவ்வாறு முழு ஆணைக்குழுவும் இங்கு சுதந்திரமாக இயங்குகின்றது. ஒரு சுதந்திரமான, நேர்மையான ஆட்சி நடைபெற்றுவருகின்றது.

இந்த ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமா, அல்லது சர்வாதிகாரிகளிடம் இந்த ஆட்சியை மீண்டும் கையளிக்க வேண்டுமா? அதேபோன்று தனிப்பட்ட ஒரு குடும்ப ஆட்சியை நடத்துபவர்களிடம் இந்த ஆட்சியை கையளிக்க வேண்டுமா என்பதை இந்த நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளது. காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது, காணாமல்போனவர்களுக்கான ஆணைக்குழுவினை நியமித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரே நோக்குடனேயே செயற்பட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவருகின்ற உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.

வடகிழக்கு பகுதிக்கு சுதந்திரமான ஆட்சியொன்றை வழங்கவேண்டும் என்பதில் இருவரும் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய அரசாங்கம் ஒன்று ஏற்பட்டதன் பின்னர், புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடி அந்த அரசியலமைப்பு சபை மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வினை கொண்டுவருவதற்கு இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருமித்த கருத்துகளுடன் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் திடமாக இருக்கின்றது.

இந்த அரசியல் தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் பல வழிகளில் முயற்சிசெய்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஜனாதிபதியாக கொண்டுவந்தபோது பல உறுதிமொழிகளை வழங்கினார்.

ஆனால் அவற்றினை காற்றில் பறக்கவிட்டார். ஐக்கிய தேசிய கட்சியினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் எந்த மறுப்பினையும் தெரிவிக்கவில்லை.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வினை வழங்குவதன் மூலமே இந்த நாட்டில் நிலையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளமுடியும். ஐக்கிய தேசிய கட்சியினை பொறுத்தவரையில் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்கின்றது.

ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வந்தால் கிழக்கு மாகாணசபையினை முஸ்லிம்களிடம் ஒப்படைத்துவிடுவார் என்ற பிரசாரத்தினை சிலர் முன்னெடுத்துவருகின்றனர்.

இது அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றுகின்ற ஒரு கதையாகும்.கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

நாங்கள் அதிகளவான உறுப்பினர்களை தெரிவுசெய்து மாகாணசபைக்கு அனுப்பினால் தமிழ் முதலமைச்சர் வருவார்.

மாகாணசபையில் எந்த அரசியல் கட்சி கூடுதலான ஆசனங்களை பெறுகின்றதோ அந்த கட்சியை ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுவார்.

அதனைவிடுத்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், கருணா அம்மானின் கட்சியினர் இணைந்து பொய்யான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறான கருத்துகளை தெரிவிக்கின்றனர். கோத்தபாயவின் கூலிப்படையாகவே இவர்கள் செயற்பட்டுவருகின்றனர்.

இவர்களின் காலத்தில்தான் தமிழ் இளைஞர்கள் துடிதுடிக்க கொலைசெய்யப்பட்டார்கள், கப்பம்பெற்றார்கள், கடத்தல்கள் நடந்தது. அவர்களின் அந்த யுகத்தினை மீண்டும் கொண்டுவருவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

இன்று கொலைக்குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டவர்கள் கூட கோத்தபாயவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகின்றார்கள்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.