தேர்தல்களில் தமிழர்களும் இறங்கி நிற்கிறார்கள். அது அவர்களுக்கு தேவையற்ற விடயம்.
எனவே இப்படியானவர்களை கருத்தில் கொள்ளாது ஜனநாயக ரீதியாக தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் 16ம் திகதி ஒரு ஜனாதிபதித் தேர்தலை எமது மக்கள் சந்திக்கப் போகிறார்கள். இந்த தேர்தல் முன்னைய தேர்தல்களை விட ஒரு வித்தியாசமான தேர்தல்.
ஏனெனில் கட்சிகளின் முன்னிலையில் நிற்போர் எவருமே போட்டியிடவில்லை. மகிந்த ராஜபக்ஸ போட்டியிட முடியாதவராக போட்டியில் இருந்து ஒதுக்கியிருக்கிறார்.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தும் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாக போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
எனவே இப்பொழுது போட்டியிடுவது கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள். இந்த தேர்தலில் தமிழர்கள் தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இந்த தேர்தலில் எந்தவொரு தமிழனும் வாக்களிக்காது விடக்கூடாது.வாக்குரிமை என்பது தமிழர்களின் வாழ்வுரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு நடுநிலமையாக நிற்கின்றேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு நீதியின் பக்கம் நிற்கின்றார்களா அல்லது ஒரு அநீதியின் பக்கம் நிற்கின்றார்களா என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.
அத்துடன் தேர்தல்களில் தமிழர்களும் இறங்கி நிற்கிறார்கள். அது அவர்களுக்கு தேவையற்ற விடயம். ஒரு 500, 1000 வாக்குகளை பிரிந்து உதறிவிடலாம் என்ற எண்ணத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
எனவே இப்படியானவர்களை கருத்தில் கொள்ளாது ஜனநாயக ரீதியாக தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
அந்த வாக்குரிமை எமது ஜனநாயக ரீதியான எதிர்கால வாழ்வியலை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஒரு வேட்பாளர் இராணுவமும், புலனாய்வு துறையும் மீள கட்டமைக்கப்படும் என கூறியுள்ளார்.
அதனூடாக தேசிய பாதுகாப்பு நிலைநிறுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேசிய பாதுகாப்பு கடந்த காலங்களில் தமிழர்களின் அடக்குமுறையாகத் தான் முடிந்தது என்பது நாம் கற்றுக் கொண்ட பாடங்கள்.
இராணுவ மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்களில் தலைவர்களாகவோ அல்லது அதிகாரிகளாகவோ தமிழர்கள் இருக்கப் போவதில்லை.
இதனால் அவை பேரினவாதிகளின் அடக்கு முறைக்காகவே பயன்படுத்தபடுகிறது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.