அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அதிமுக்கிய கூட்டம் வவுனியாவில்

Report Print Theesan in அரசியல்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியாவில் இடம்பெற்று வருகிறது.

தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, யாழ். மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை தலைவர்களான ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி தேர்தல், கட்சியின் எதிர்கால செயற்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும்பாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்களிப்பு தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படலாம் என தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அன்ன சின்னத்தில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவிற்கே வாக்களிக்க வேண்டும். ஒப்பீட்டளவில் கோத்தபாயவை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியிருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த கூட்டத்தில் வைத்து ஏகோபித்த முடிவாக அன்ன சின்னத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவு எட்டப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

அப்படியான முடிவு எடுக்கப்படாவிட்டாலும் கூட அது சார்ந்த ஒரு சமிக்ஞை வெளிக்காட்டப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.