ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் மைத்திரியின் கடைசி உரை! வெளிவரவிருக்கும் முக்கிய தகவல்கள்? கலக்கத்தில் அரசியல் புள்ளிகள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 18ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதிய ஜனாதிபதி 19ஆம் திகதி பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்கு தயாராகி வருகின்றார் என்கின்றன கொழும்புத் தகவல்கள்.

குறிப்பாக தான் ஆட்சியில் இருந்த இந்த காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது மனம் திறந்த உரையாற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதியில் எடுத்த முடிவுகள் மற்றும் சிக்கல் தொடர்பில் இந்த உரையில் அடங்கியிருக்கும் என்கின்றன தகவலறிந்த வட்டாராங்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற உரையானது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் மைத்திரியின் கடைசி உரையானது வேட்பாளர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் அரசியல் தரப்பினர்.

குறிப்பாக ஜனாதிபதியின் இந்த உரையில் ஐந்து ஆண்டுகளாக தான் சந்தித்த நெருக்கடிகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை அவிழ்த்துவிடும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு என்பது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் போதைப் பொருளுக்கும் எதிராக தன்னை முழுமையாக செயற்பட விடாமல் தடுத்தவர்கள் தொடர்பிலும் மைத்திரி இதன் போது குறிப்பிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

முன்னதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்றும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கப் போவதாகவும் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தான் ஜனாதிபதியாக ஒருமுறை மாத்திரமே பதவியில் இருப்பேன் என்றும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் மைத்திரிபால குறிப்பிட்டிருந்தார். அதனை செயலிலும் காட்டி தன்னுடைய வாக்குறுதியை காப்பாற்றியிருக்கின்றார் என்கிறார்கள் அவரின் விசுவாசிகள்.