கிளிநொச்சியில் ரணில் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தற்பொழுது நாட்டில் வெள்ளை வான் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த 2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்து எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும்.

தற்பொழுது நாட்டில் வெள்ளை வான் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வான் மட்டுமே வரும்.

2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம்.

2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது. ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவரவேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது நாடாளுமன்றத்தில் 120 க்கு மேறபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது.

கிளிநொச்சியை அபிவிருத்தியை செய்வதற்கு நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம். ஆனையிறவு உப்பளம் புனரமைத்தல், பூநகரியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துதல், வடக்கு கிழக்கில் விசேட பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தொழில் வாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம் என்றார்.