சஜித் பிரேமதாச பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்: ரோசி சேனநாயக்க

Report Print Rusath in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ள பெண்களுக்கான 10 அம்ச விடயங்கள் வெறுமனே தேர்தலுக்கான முன்வைப்புக்கள் அல்ல என கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அது இலங்கை நாட்டில் நிரந்தரமாக பேணப்படவேண்டிய விடயங்கள் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

பெண்களுக்கான சுயாதீனமான ஒரு ஆணைக்குழு அமைத்தல். அதனூடாக பாகுபாடின்றி செயற்பாடுகளை முன்னெடுத்தல். தனியார் மற்றும் அரச அமைப்புக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல், பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த ஆணைக்குழுவினூடாக தீர்வுகாணப்படும்.

சட்டம் மற்றும் நீதி விடயங்களில் அனைத்து விடயங்களிலும பெண்கள் சமமானதாக நடத்தப்படுவதோடு, நிவாரணங்களைப் பெறுவதற்குரிய வழிமுறையை உருவாக்கி பெண்களது உரிமைகளைப் பாதுகாத்தல், சுயாதீன சபைகள் மற்றும் தீர்ப்பாயங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டு பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அடிப்படையில் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.