தமிழ் மக்களை நாசமாக்கும் முட்டாள்தனமான முடிவை கூட்டமைப்பு எடுக்கக்கூடாது

Report Print Rakesh in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் முட்டாள்தனமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடாது. அப்படி முடிவெடுத்து தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூட்டமைப்பு நாசமாக்கக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது, ஆரோக்கியமானது, திருப்திகரமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளர் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"வாய்ப் பேச்சிலும் போலி வாக்குறுதிகளை வழங்குவதிலும் தான் சஜித் வீரர். செயலில் அவரிடம் ஒன்றுமே இல்லை. ரணிலும் சஜித்தும் ஒன்றுதான். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரங்கேறிய அனைத்து மோசடிகளுக்கும் இவர்கள் இருவரும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.

இந்தநிலையில், சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை நகைப்புக்குரியது.

உண்மையில் நடக்கக்கூடிய விடயங்களைத்தான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது வேட்பாளர் (கோத்தபாய) முன்வைத்துள்ளார். இதை உணராமல் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது.

நான்கு வருடங்களாக ரணில் அரசின் வாலைப்பிடித்துக்கொண்டு அவர்களைக் காப்பாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்துள்ளது? ஒன்றுமே இல்லை. வடக்கு மக்கள் கடன் சுமையில் மூழ்கியுள்ளார்கள். அதனால் அவர்களில் சிலர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்கள்.

எனவே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் முட்டாள்தனமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடாது. அப்படி முடிவெடுத்து தமிழ் மக்களின் வாழ்க்கையை கூட்டமைப்பு நாசமாக்கக்கூடாது. அம்மக்களை மீண்டும் நடுத்தெருவில் விடக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம். எனவே, கூட்டமைப்பு எதனையும் எம்முடன் பேசித் தீர்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.