பிரபாகரனின் ஆயுதத்தால் முடியாததை தந்திரமாக பெற்றுக்கொள்ள சம்பந்தன் - சுமந்திரன் முயற்சி..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

வடக்கில் ஐந்து கட்சிகள் இணைந்து 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளதை நான் வரவேற்கின்றேன். காரணம் தமிழர் தரப்பின் அடிப்படை கோரிக்கைகளை அது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கின்றது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழர் தரப்பின் அடிப்படை கோரிக்கைகளை 13 அம்ச கோரிக்கை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கின்றது. நல்ல விடயம். ஆனால் அது கனவு. நடைமுறை என்பது வேறு. அந்தக் கனவை அப்படியே நாங்கள் கொண்டுவந்து மேசையில் வைத்து சஜித்துடனோ கோத்தாவுடனோ பேச முடியாது.

ஆனால் இவ்வாறு கனவு உள்ளது என்பதனை வலியுறுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. அது இல்லாவிட்டால் தமிழருக்கு எது தேவை அபிலாஷை என்ன எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

புலிகள் இருந்த காலத்தில் திம்பு கோட்பாடு உருவாக்கப்பட்டது வடக்கு கிழக்கை இணைத்தல், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, இலங்கையில் பிறந்து வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் குடியுரிமை என்பனவே அவையாகும்.

இவற்றில் நான்காவது விடயத்தில் நன்மையடைந்தவர்கள் மலையகத் தமிழர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவை முக்கியமான கோட்பாடுகள். அவ்வாறான விடயமாகவே இந்த 13 அம்ச திட்டத்தையும் நான் பார்க்கின்றேன்.

கேள்வி : சஜித் தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி அமைந்தால் இந்த 13 கோரிக்கைகளை பரிசீலிக்கப்படுமா?

பதில்: அவற்றை நாங்கள் பரிசீலிக்கலாம். கவனத்தில் எடுக்கலாம். கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம் தேசிய இனப்பிரச்சினை என்பது பிரதான பிரச்சினையாகும். யார் என்ன சொன்னாலும் பிரச்சினைகளை வரிசைப்படுத்தினால் மனோ கணேசனை பொறுத்தவரை முதலில் வருவது தேசிய பிரச்சினைதான். அந்த எண்ணப்பாட்டில்தான் ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் அது மட்டும் பிரச்சினை அல்ல. இன்னும் முக்கியமான பிரச்சினை உள்ளது.

கேள்வி : நல்லாட்சியில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியாது என்று முதலில் கூறியவர் நீங்கள். அதனால் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்: புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தொடரும். ஆனால் நான் சொன்னது அப்படியே அச்சொட்டாக நடந்திருப்பதை பார்த்து கவலையடைகின்றேன். கவலையடைகின்றேன் என்பதனை இதயபூர்வமாக சொல்கின்றேன்.

காரணம் அந்த தோல்விக்கு அரசாங்கத்தின் பக்கத்திலேயே அரசியல் திடம் இல்லாமை ஒரு காரணமாகும். மறுபுறத்திலே இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தவறிவிட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வழிகாட்டல் குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வந்திருக்கக்கூடாது. வெளியில் இருந்திருக்க வேண்டும்.

கூட்டமைப்பு உள்ளே வந்து கலந்துரையாடி பேச்சு நடத்தி வரைவை எழுதி வெளியிடுவதற்கான தேவைப்பாடு இருக்கவில்லை. கடந்தகாலங்களில் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டா செல்வா பிரேமதாசவின் வட்ட மேசை மாநாடு, ரணில் – பிரபா பேச்சு, மஹிந்தவின் சர்வகட்சி போன்ற பல ஆவணங்கள் உள்ளன. சந்திரிகாவின் பொதி இருந்தது. அவற்றை எடுத்து கலந்தாலோசித்து ஒரு தீர்வு பொதியை தயாரித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் கொடுங்கள் என்று கூறியிருக்கலாம். அவர்களை உள்ளே இழுத்துவிட்டிருக்கலாம். ஐ.நா.வும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆனால் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு பிணை வாங்கி கொடுத்துவிட்டு இங்கே வந்து வழி காட்டல் குழுவில் அமர்ந்து விட்டார்கள். கூட்டமைப்பு வெளியில் இருந்திருந்தால் ஏதாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும்.

வழி காட்டல் குழுவில் பங்கேற்ற சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் நேர்மையாக உழைத்தார்கள். சம்பந்தன் தனது வயதை மீறி மேசையில் அடித்து பல நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசினார். அவர் பேசும்போது பிரதமர் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக செவிமடுத்தோம்.

சுமந்திரன் தனது நண்பர் ஜயம்பதியுடன் இணைந்து கஷ்டப்பட்டு வரைபை தயாரித்தார். அந்த உழைப்பை அவர் நீதிமன்றத்தில் செய்திருந்தால் பல இலட்சக்கணக்கான பணத்தை உழைத்திருக்கலாம்.

ஆனால் சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரவில்லை. அரசியல் தலைவராகவே கொண்டுவந்தோம். ஆனால் சட்டத்தரணியாக இருந்துவிட்டார். இறுதியாக அவர் செய்த உழைப்பே அவருக்கு எதிரியாகிவிட்டது. காரணம் பிரபாகரனினால் ஆயுதத்தால் முடியாததை சம்பந்தன் சுமந்திரன் தந்திரமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அது போலிக் குற்றச்சாட்டுதான் என குறிப்பிட்டுள்ளார்.