கண்டி மாவட்டத்தில் வெற்றி நடை போடும் சஜித் பிரேமதாச! வேலுகுமார் எம்.பி

Report Print Ajith Ajith in அரசியல்

கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கான விசேட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் எம்.பியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக சகல வசதிகளையும் கொண்ட தமிழ் தேசிய பாடசாலையொன்று கண்டி மண்ணிலே உதயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த எமது கட்சியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், வரலாற்று வெற்றியை பதிவு செய்வதற்காக இன்னும் நாம் உத்வேகத்துடன் களப்பணியாற்ற முன்வரவேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன்.

கண்டி மாவட்டத்தில் நிலவும் – இதுவரையில் தீர்வுகாணப்படாமல் இழுபறி நிலையிலுள்ள பிரச்சினைகளுக்கு நவம்பர் 18 ம் திகதிக்கு பின்னர் துரித கதியில் தீர்வுகள் முன்வைக்கப்படும் என எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக வீடமைப்பு திட்டம் சார் பிரச்சினைகள் முன்னுரிமை வழங்கி தீர்த்து வைப்பதற்கு அவர் எதிர்பார்க்கின்றார். அந்தகையில் மஹியாவ மக்களுக்கான வீடமைப்பு திட்டம், நித்தவல மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஆகியன உரியவகையில் நிறைவேற்றப்படும் என்பதுடன், தோட்டப்பகுதிகள் மீது விசேட கவனம் செலுத்தப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்ட பல விடயங்களை தனது தேர்தல் அறிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்.

இதன்படி தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். குறுகிய மற்றும் நீண்ட காலத்தின் அடிப்படையில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, தொழிலாளர்கள் சொந்தகாலில் நிற்கும் நிலை உருவாகும் வரை அவர்களுக்கு நாளாந்த வருமானமாக 1500 ரூபா கிடைப்பதை உறுதிப்படுத்துவேன் என்றும் எமது ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்துள்ளார்.

நல்லாட்சியின் கீழ் எமது மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வென்றெடுத்துள்ளோம். உரிமைசார் விடயங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, இதே வேகத்தில் முன்நோக்கி பயணித்து சமூக மாற்றம் என்ற நிலையை அடைய வேண்டுமானால் எமக்கு இந்த ஆட்சி தொடரவேண்டும். அதற்காக சஜித்தை நிச்சயம் ஜனாதிபதியாக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எங்கள் அன்னமே வெற்றி நடை போட்டது. 88 ஆயிரத்து 409 மேலதிக வாக்குகளால் மஹிந்தவை மண்கவ்வ வைத்தோம்.

இம்முறை சஜித் வெற்றி நடைபோடுவார். வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது எம் பணியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.