சஜித்திற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது ஏன்? காரணம் கூறும் கோத்தபாய

Report Print Murali Murali in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தங்கள் பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டின் பிளவுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது என்பது அவர்களின் அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.

வடக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண சபை தேர்தல்களை நடத்தி, நாங்கள் ஜனநாயகத்திற்கு உறுதியளித்தோம். ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் அகற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன.

வடக்கில் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல, நிம்மதியாக இருக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. தொழில்கள் தனியார் துறையுடன் நிறுவப்பட்டன.

எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு, நாட்டின் பிளவுக்கு ஆதரவளிப்பவர்களுக்கே இருக்கின்றது.

இதேவேளை, ஏப்ரல் 21ம் தினதி இடம்பெற்ற தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் வெளிநாட்டு உளவுத்துறை வழங்கியிருந்தது.

ஆனால் இந்த அரசாங்கத்தால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. இதற்கு அமைச்சரவையே பொறுப்பு” என அவர் மேலும் கூறியுள்ளார்.