சந்திரிக்காவின் அரசியல் காய்நகர்த்தலால் கோத்தபாயவுக்கு நெருக்கடி! ஏற்படவுள்ள திடீர் திருப்பங்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக முழுமையான சக்தியை பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவறியுள்ளதாக மஹிந்த தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக இரு கட்சிகளும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய செயற்படக் கூடாது என மஹிந்த அணியின் உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ராஜபக்ஷர்களிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை காப்பாற்றும் தீவிர முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டு வருகிறார்.

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலருடன் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திரிக்கா இணைந்துள்ளார். இது கோத்தபாயவின் வெற்றிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மஹிந்த தரப்பின் வாதமாகும்.

இதனால் கோத்தபாய வெற்றி பெற்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, அமைச்சசு பதவிகளை வழங்க கூடாது என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் கருத்தாகியுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கோத்தபாயவுக்கு ஆதரவான பிரச்சார மேடைகளில் ஏற முடியாத வகையில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இதனால் அவர்களுடன் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அவசியம் இல்லை என்ற தீர்மானத்திற்கு கோத்தபாய தரப்பினர் வந்துள்ளனர்.

விசேடமாக வேட்பு மனு பட்டியலில் 30 வீதம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவதில் எவ்வித அவசியமும் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றாலும் தயாசிறி ஜயசேகர உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக அடுத்து வரும் சில நாட்களில் கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள், சந்திரிக்கா தலைமையிலான அணியுடன் இணைந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.