பிரதமரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று கொழும்பில் சந்திக்கவுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், தேவைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது அம்பாறை தமிழ் மக்களின் வாக்களிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அம்பாறை தமிழ்ப் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், புத்திஜீவிகள் அடங்கிய குழு அதற்கான திட்ட முன் வரைவினை தயாரித்துள்ளதாகவும், அதற்கு பிரதமர் ரணில் இணங்கும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பூரணமாக ஆதரிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வரைபு வரையப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போல் எவ்வித கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எவ்வித பலனும் அம்பாறை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

அதனால் அவர்கள் பல கோணங்களிலும் நசுக்கப்பட்டு வந்தார்கள். கட்சிகளும் கைகொடுப்பதில்லை. எனவே இனியும் அவ்விதம் தொடர அனுமதிக்க முடியாது.

இருப்பதையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு புத்திஜீவிகள் பலத்த அழுத்தம் கொடுத்து வந்ததன் விளைவாகவே இச்சந்திப்பு என குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் அரசியல் பாதை புது வடிவம் பெறலாமெனவும் தெரிவித்துள்ளார்.