அராஜக ஆட்சியின் பொறுப்பை சிவாஜிலிங்கமே ஏற்க வேண்டும்! சிவமோகன் எம்.பி காட்டம்

Report Print Theesan in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு முன்னமே தீர்மானம் எடுத்திருந்ததாகவும், யாரையும் விட்டு விட்டு தாம் செல்லவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் முன்னம் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழரசு கட்சி முடிவினை எடுக்கும் முன்னமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு அந்த முடிவை ஏற்கனவே எடுத்திருந்தது.

அதனை உடனே அறிவிக்காமல் மற்றைய வேட்பாளரும் தனது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின் தீர்மானம் எடுப்பதாக இருந்தது. அந்த தீர்மானமும் வந்தது.

அதன் பின்னர் தமிழரசு கட்சி தனது முடிவினை எடுத்தது. எனினும் ஏனைய இரண்டு கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கபட்ட தீர்மானத்தின் வரைபை வெளிவிடுவது என்று முடிவினை எடுத்தது.

அதன்படி தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எவரையும் விட்டு விட்டு நாம் செல்லவில்லை. ஒரு தரப்பு வெல்ல வேணும் என்பதை விட இன்னொரு தரப்பு வெல்ல கூடாது என்பதே எமது மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால் எமது மக்களும், கூட்டமைப்பும் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன.

தேர்தலில் வாக்களிக்க கூடாது என்று சொல்பவர்களும், எனக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கூறுபவர்களும், ஏதோ ஒரு விதத்தில் தோற்கடிக்கபட வேண்டியவரை வெல்ல பண்ணலாம் என்ற எண்ணத்தில் இறங்கியதாகவே நாம் கருதுகிறோம். அதில் சிவாஜிலிங்கமும் விதிவிலக்கல்ல.

ஜனநாயக சூழலை குழப்பிய பெயர் அவருக்கு கிடைக்கும். அது தான் அவருக்கு கிடைக்கும் பரிசு. மீண்டும் ஒரு அராஜக ஆட்சி இந்த நாட்டில் உருவாக்கினால் அதற்கான பொறுப்பை சிவாஜி ஏற்க தயாராக வேண்டும். பகிஸ்கரியுங்கள் என்று சொல்பவர்களும் அதை ஏற்க தயாராக வேண்டும்.

இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் தங்களது வாக்குகள் வீணாகாத வகையில் ஜனநாயக கடமையை சரியாக செய்ய வேண்டும்.

இங்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுவோரும், வாக்கு சீட்டை நிராகரிக்கும் வகையில் பாவியுங்கள் என கூறுபவர்களும், சில்லறையாக இருந்துகொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்பவர்களும், அராஜகத்தனமாகவும் , வஞ்சகத்தனமாகவும் மக்களை தள்ளி விடுபவர்களாகவே இருப்பார்கள்.

எனவே மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.