மன்னாரில் சஜித் பிரேமதாச அள்ளி வீசிய வாக்குறுதிகள்...

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஒருமித்த நாட்டில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வினை இன, மத, மொழி மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன, மத, மொழி பேதங்களை மறந்து மீண்டும் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இந்த பிரதேசத்திலுள்ள குளங்களை அபிவிருத்தி செய்து உங்களது விவசாய நடவடிக்கைகளை சீரமைக்க வழிவகுப்பேன்.

தலை மன்னாரில் இருந்து திருகோணமலை வரையிலான நான்கு வழிப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

புத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான வீதியை வில்பத்து வனத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

விவசாயத்துறை, மீன் பிடித்துறை போன்றவற்றை வளப்படுத்துவதற்கான, அதன் மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன்.

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசதான் அன்றைய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகளையும் மதிய போஷணத்தையும் வழங்கியிருந்தார்.

ஆனால் அதனை தற்போது எங்களுடைய பிரதிவாதிகள் நிறுத்தியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் நான் தலைமை வகிக்கவுள்ள அரசாங்கத்தில் நாட்டிலுள்ள 44 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு சீருடைகள், பாதணி மற்றும் மதிய போஷணம் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

மன்னாரில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களுக்குமான கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுப்போம். இது மன்னாருக்கு மாத்திரம் அல்ல முழு நாட்டிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதன்மூலம் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதே எமது நோக்கமாக இருக்கின்றது.

ஏழை மக்களுக்கு சமுர்த்தி என்ற வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாச நடைமுறைப்படுத்திய ஜனசவி என்ற வேலைத்திட்டத்துடன் சமுர்த்தி திட்டத்தினையும் வழங்கி இந்த நாட்டில் இருந்து ஏழ்மையை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

பாலர் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுப்பதோடு உப ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து சம்பளம் வழங்கப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். பாலர் பாடசாலை கல்வியையும் இலவச கல்விக்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

இந்த ஒருமித்த நாட்டில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வினை இன, மத, மொழி மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டில், பயங்கரவாதத்திற்கு நான் இடமளிக்கப்போவதில்லை, போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோக நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு நான் இடமளிக்கப்போவதில்லை.

இனவாதத்தை தூண்டுபவர்களிற்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்குவதற்கு நான் ஒருபோதும் பின்னிற்க போவதில்லை.

நான் ஒரு தூய்மையான பௌத்தனாக இருக்கின்றேன். புத்த பகவான் கூறியிருக்கின்றார் ஒரு மதத்தை வைத்தோ, இனத்தை வைத்தோ பிறிதொரு இனத்தை அழிக்கக் கூடாது என்று. அதை மையமாக வைத்து இன, மத பேதங்களுக்கு அப்பால் என்னுடைய அரசாங்கத்தில் அபிவிருத்தியை நான் கொண்டு வருவேன் என்பதை உறுதியளிக்கின்றேன்.